தமிழக அரசின் அவசர சட்ட வரைவு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு தயாரித்துள்ள அவசர சட்ட வரைவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று மதியம் இறுதி வடிவம் அளித்தது.

பிறகு சம்பந்தப்பட்ட மற்ற 3 அமைச்சகங்களுக்கு கருத்து கேட்டு உடனடியாக அனுப்பப்பட்டது. அவசர சட்ட வரைவு மீது சட்டம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் ஆகிய 3 மத்திய அமைச்சகங்களும் தங்கள் கருத்துகளை சேர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று மாலை அனுப்பிவிட்டன.

இதில் சட்ட அமைச்சகம் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோஹத்கியிடம் அனுப்பி கருத்து பெற்று அனுப்பியது. இதை பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு கிடைத்த கருத்துகளுக்கு ஏற்ற வகையில் சிறிய திருத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த அவசரச் சட்ட வரைவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இதை குடியரசுத் தலைவர் படித்து நாளை அனுப்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு உடனடியாக அனுப்பப்படும். பிறகு இது தமிழக அரசால் அதன் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இறுதி ஒப்புதல் பெறப்படும். எனவே, ஜல்லிக்கட்டு மீதான இந்த அவசரச் சட்டம் நாளை (சனிக்கிழமை) பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.