காளைகளை தடை செய்து சிங்கங்களை திறந்து விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு காளைகளை தடை செய்ததன் மூலம் தமிழ் சிங்கங்களை திறந்துவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டும் என்று இன்று அலங்காநல்லூரில் 5வது நாளாகவும், சென்னை மெரினா கடற்கரை உட்பட தமிழகத்தின் ஏனைய பகுதிகள் முழுவதும் 4வது நாளாகவும் கோடிக்கணக்கான தமிழ் சிங்கங்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கர்ஜித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக செல்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வருவதால், பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் ஆண்களும் பெணகளுமாக பல லட்சம் இளைஞர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களோடு சிறுவர் – சிறுமிகளும், கைக்குழந்தைகளுடன் தாய்மார்களும் பங்கேற்றுள்ளனர்.

மெரினாவில் திரண்டுள்ள போராட்டக்காரர்கள் பகல் பொழுதில் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அதேபோன்று, சிறிதும் உற்சாகம் குறையாமல், இரவு நேரத்திலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். இருள் சூழ்ந்தாலும் கவலைப்படாமல், செல்ஃபோன் ஃப்ளாஷ் மற்றும் மொபைல் டார்ச் லைட்டுகளை எரியவிட்டபடி, இளைஞர்கள் தங்களது போராட்டத்தை நடத்துவது வழக்கமாக உள்ளது.

அந்த வெளிச்சத்திலேயே, இரவு உணவு முடித்து, கடற்கரையிலேயே படுத்து உறங்கும் இளைஞர்கள், தங்களுடன் உள்ள பெண்களுக்குப் போதிய பாதுகாப்பும் வழங்கி, கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இன்று 4வது நாளாக, இருட்டிய பிறகும், விண்ணை நோக்கி, டார்ச் அடித்தபடி, தங்களது போராட்டத்தை மேற்கொண்டுள்ள இளைஞர்கள், கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

 

Read previous post:
0a
தமிழக அரசின் அவசர சட்ட வரைவு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு தயாரித்துள்ள அவசர சட்ட வரைவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய

Close