ஜல்லிக்கட்டு: நடிகர் சங்கம் நடத்தும் மௌன போராட்டத்தில் அஜீத், த்ரிஷா பங்கேற்பு!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று நடத்தும் மௌன போராட்டத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என கோரி சென்னை மெரினா கடற்கரை, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உட்பட பல்வேறு ஊர்களில் பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டம் தேர்தல் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என சகல துறையினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட நட்சத்திரங்கள் பின்னால் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருந்த நிலை மாறி, இன்று தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள இளைஞர்கள் பின்னால் திரை நட்சத்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. மேலும், பீட்டாவில் உறுப்பினர்களாகியோ, வேறு வகைகளிலோ பீட்டாவுக்கு உறுதுணையாக இருந்த – இருக்கும் நடிகர் – நடிகைகள், போராடும் இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, “நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரியல்ல” என காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், நடிகர் சங்கம் சார்பில் இன்று நடைபெற்றுவரும் மௌன போராட்டத்தில் நடிகர் – நடிகையர் பங்கேற்று வருகிறார்கள்.

காலை 8 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் மவுனப் போராட்டத்தை தொடங்கினார்கள். நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், ரகுமான், அருண் விஜய், பிரசன்னா, நடிகைகள் த்ரிஷா, கோவை சரளா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்கள்.

0

இப்போராட்டத்தில் நடிகர் அஜித்குமார், தன் மனைவி ஷாலினியுடன் பங்கேற்றுள்ளார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தின் மீது குவிக்கப்பட்டிருக்கும் கவனத்தை தங்கள் பக்கம் திசை திருப்புவதற்காக நடிகர் – நடிகையர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள் என கடும் விமர்சனம் எழுந்ததை அடுத்து, “இன்றைய எங்கள் மௌன போரட்டத்தை தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்கள் படம் பிடித்து ஒளிபரப்ப வேண்டாம்” என நடிகர் சங்கம் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.