சாதி ஆணவக் கொலையில் கணவரை பறிகொடுத்த கௌசல்யா: பறையிசை கலைஞரை மணந்தார்!

சாதி கடந்து காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியரை கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று, உடுமலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் சாதி ஆணவக் கும்பல் ஒன்று அரிவாளால் கொடூரமாக வெட்டிச் சாய்த்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கெளசல்யா, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

சங்கர் படுகொலை தொடர்பாக உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கெளசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கிய திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை, மற்றொருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, அடைக்கலம் தந்தவருக்கு ஐந்து ஆண்டு தண்டனை விதித்தது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதன்பின், சாதிக்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கௌசல்யா ஈடுபட்டு வந்தார். சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். சங்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார். அத்துடன் கோவை நிமிர்வு கலைக்குழுவைச் சேர்ந்த சக்தி என்பவரிடம் பறையிசையும் கற்றுவந்தார்.

இந்நிலையில், இன்று காலை கோவை பெரியார் படிப்பகத்தில் கௌசல்யாவுக்கும், பறையிசைக் கலைஞர் சக்திக்கும் திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டினன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, சமூக செயல்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.