தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயம் ஆனது நஞ்சராயன் குளம்

தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

”திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும்” என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. “நஞ்சராயன் குளம் பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பறவைகள் விளக்க மையம் ஏற்படுத்தப்படும். சரணாலய பணிகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று வனத்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளத்தை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் குளத்தை 17வது பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பறவை விரும்பிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.