காவிரி வன்முறை: “சாதாரண மக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது!” – விஜய் சேதுபதி

காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்களைத் தாக்குவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ பதிவில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

”நம் பிரச்சினைகளை எடுத்து கையாள்வதற்காகத் தான் ஓட்டு போட்டு அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். நம் கோரிக்கைகளை அவர்களிடம் விட்டுவிடுவோம். அவர்கள் காவிரி பிரச்சினைக்காகப் பேசி தீர்வு கொண்டு வரட்டும்.

அதைத் தவிர்த்துவிட்டு ஒரு நாள் வேலைக்குப் போகவில்லை என்றால்கூட குடும்ப வாழ்க்கையில் கஷ்டப்படுகிற, இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரணப் பொதுமக்களைத் தாக்குவது வருத்தமாக உள்ளது.

அப்படித் தாக்கப்பட்ட ஒவ்வொருவருக்குப் பின்னால் அவரை நேசிக்கும், அவர் வரவுக்காக காத்திருக்கும் ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது. இந்த பிரச்சினை மட்டும் இல்லையென்றால் நமக்குள் பெரிய அன்புப் பரிமாற்றம் நடந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

நமக்குள் இருக்கும் பகை உணர்ச்சி காலங்காலமாக திணிக்கப்பட்டு உள்ளது. அதை நாம் உணர வேண்டும். எனக்கு என் மொழி என்பது தாய் மாதிரி. நான் என் அம்மாவை மதிக்கிறேன். நேசிக்கிறேன். அதே மாதிரிதான் உங்களையும், உங்கள் மொழியையும் மதிக்கிறோம். நேசிக்கிறோம்.

இந்த காவிரி பிரச்சினையை அரசாங்கம் கையாளட்டும். நம் கோரிக்கைகளை அரசிடம் முன்வைப்போம். பகை உணர்ச்சியை மறப்போம். வன்முறையைக் கைவிடுவோம். தயவுசெய்து சாதாரண மக்களைத் தாக்காதீர்கள். அது வருத்தமாகவும், கஷ்டமாகவும் உள்ளது” என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.