இயேசு தமிழ் இந்துவாம்! ஆர்.எஸ்.எஸ். புத்தகத்தால் புதிய சர்ச்சை!

“பசு ஈன்றுகொண்டு இருந்ததாம்…. காளை புழுத்திக்கொண்டு வந்ததாம்” என்பது எங்களூர் சொலவடை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாமல், அல்லது அது பற்றி அக்கறைப்படாமல், தன் விருப்பப்படி ஏறுக்குமாறாக ஏதாவது செய்துகொண்டிருப்பவனை காரி உமிழ இந்த சொலவடையைச் சொல்லுவார்கள். இன்று இது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, மத்திய ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்ற மமதையில் தலைகால் தெரியாமல் வெறியாட்டம் போடும் காவிக் கும்பலுக்கு நிச்சயம் பொருந்தும்.

ஆட்சியதிகாரத்தை வைத்து, உழைக்கும் மக்களுக்கு நல்லது ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், வெட்டித்தனமாக, விஷமத்தனமாக தினம் தினம் வேண்டாத வேலைகளைச் செய்து, சர்ச்சைகளையும், மோதல்களையும் ஏற்படுத்தி, அதில் குளிர் காய்ந்துகொண்டிருக்கும் இந்த காவிக் கும்பலை ஏதாவதொரு அறிவியல் அமிலம் கொண்டு அழித்தொழிக்க வேண்டியது அவசர அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த கிளம்பியிருக்கிறது ஒரு புதிய சர்ச்சை.

கிறிஸ்தவர்கள் தெய்வமான வழிபடும் இயேசு கிறிஸ்து, பிறப்பால் ஒரு தமிழ் இந்து என்றும், சிவபெருமானை தியானித்து சமாதிநிலைக்குச் சென்ற சித்தர் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கணேஷ் தாமோதர் சாவர்கர் ‘Christ Parichay’ என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். 1946ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் மராத்தி மொழியில் இம்மாதம் வெளியாக இருப்பதையொட்டி சர்ச்சை வெடித்துள்ளது.

‘சாவர்கர் நேஷனல் மெமோரியல்’ என்ற அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களின் கொள்கை, கோட்பாடு, இலங்கியங்களை பாதுகாத்து வருகிறது. இவ்வமைப்புதான், வரும் 26ஆம் தேதி Christ Parichay புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை வெளியிட உள்ளது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், கிறிஸ்தவர்கள் இதுவரையில் நம்பிக்கொண்டிருக்கும் தகவல்களுக்கு முற்றிலும் முரணானவை.

இந்த புத்தகத்திலுள்ள சில முக்கிய அம்சங்களைப் பாருங்கள்:

இயேசு கிறிஸ்துவின் நிஜப்பெயர் ‘கேசவ் கிருஷ்ணா’வாம். தமிழ்தான் அவரது தாய் மொழியாம். தோற்றத்தில் இயேசு தமிழகத்து இந்துக்களைப் போல கருப்பு நிறம் கொண்டவராம். தச்சுத் தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவராம். இருப்பினும், அந்த ஜாதி விஸ்வகர்மா பிராமணர் ஜாதி என்றே அழைக்கப்படுகிறதாம். இயேசுவின் 12வது வயதில் அவருக்கு பூணூல் போடும் சடங்கு நிறைவேற்றப்பட்டதாம்.

இயேசு கிறிஸ்துவின் தந்தை பெயர் ‘சேசப்பன்’, அதுதான் காலப்போக்கில் திரிந்து சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறதாம்.

தமிழும், சமஸ்கிருதமும் அக்காலத்தில் உலகின் ஆதிமொழிகளாக இருந்தனவாம். ஜெருசலேம் மற்றும் அரபு நாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்போருக்கு தமிழ் தாய்மொழியாக இருந்ததாம். இப்போதும்கூட அரபு மொழிகளில் தமிழின் ஆதிக்கம் இருப்பதை உணர முடியுமாம். அப்படித்தான் பாலஸ்தீனப் பகுதியில் பிறந்த இயேசுவுக்கும் தமிழ் தாய்மொழியாக இருந்ததாம். அவர் இந்தியாவுக்கு வந்து யோகா பயின்றிருந்தாராம்.

 இயேசுவை சிலுவையில் அறைந்தபிறகும், தனது யோகத் திறமையால் உயிரோடு இருந்தாராம். அவரை சக தோழர்கள் மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினார்களாம்.

இறுதிக்காலத்தில், இமயமலைப் பகுதியில் இயேசு, லிங்க வடிவத்தில் சிவபெருமானை நோக்கி தியானம் செய்துவந்தாராம். 3 வருட கடும்தவத்திற்குப் பிறகு இயேசுவுக்கு, சிவபெருமான் காட்சியளித்து, முக்தி கொடுத்தாராம். பல்வேறு பகுதிகளி்ல இருந்தும் சாதுக்களும், முனிவர்களும் அங்கு வந்து இயேசுவை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டனராம். இயேசுவை ஈஷாநாத் என்றே முனிவர்கள் அழைத்தனராம்.

 இயேசு தனது 49வது வயதில், இந்த ஜட உடலைவிட்டுச் செல்ல முடிவு செய்தாராம். இதன்பிறகு ஆழ்நிலை சமாதி நிலைக்குச் சென்று, இயேசு தனது உயிரைத் துறந்து முக்தியடைந்தாராம். இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அவர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளதாம்.

கிறிஸ்தவம் என்பது தனி மதம் கிடையாதாம். இந்து மதத்தின் ஒரு அங்கமே கிறிஸ்தவமாம்.

இவ்வாறு அந்த புத்தகம் விவரிக்கிறது.

மும்பையை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள்,  இந்த புத்தகத்திலுள்ள அம்சங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில், கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும், ஆதாரம் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் புத்தகம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

‘சுதந்திர வீரர் சாவர்கர் தேசிய நினைவக’த்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர் கூறுகையில், “70 வருடம் கழித்து இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும் என எனக்கும் தெரியும். ஆனால், இது புதிது கிடையாது. ஏற்கனவே எழுதியுள்ள புத்தகத்தை தான் மராத்தியில் வெளியிடுகிறோம்” என்றார்.

தீர்வு காண வேண்டிய அடிப்படை பிரச்சனைகளிலிருந்து இந்திய மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, சர்ச்சை வரும் என்று தெரிந்தே, இந்த கும்பல் இத்தகைய வேண்டாத வேலைகளில் தொடர் ந்து ஈடுபட்டு, நாட்டை நாசப்படுத்தி வருகிறது.

காவிக் கும்பலின் வெறியாட்டத்தை ஒடுக்குவதற்கு பெரியாரிஸ்டுகள், அம்பேத்காரிஸ்டுகள், மார்க்சிஸ்ட்டுகள், ஃபெமினிஸ்ட்டுகள், முற்போக்கான இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் போன்றோரைக் கொண்ட பரந்த, விரிந்த ஐக்கிய முன்னணி ஒன்றை அவசரமாக கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை காவிக்கும்பல் எதிர்மறையாக நம்மை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பதை உணர்வோமாக!

– அமரகீதன்

Read previous post:
0001d
கோவை போலீஸ் நிலையத்தில் பீப் நடிகர் சிம்பு!

பீப் நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச பீப் பாடல் இணையதளத்தில் வெளியானது. பெண்களை இழிவுபடுத்தும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர்

Close