கோவை போலீஸ் நிலையத்தில் பீப் நடிகர் சிம்பு!

பீப் நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச பீப் பாடல் இணையதளத்தில் வெளியானது. பெண்களை இழிவுபடுத்தும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது புகார் செய்தனர்.

இப்புகாரின் பேரில் சிம்பு, அனிருத் ஆகிய இருவர் மீதும் ரேஸ்கோர்ஸ் போலீசார், பெண்களை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல்  சென்னை உள்பட தமிழகம் முழுவதும்   பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிம்பு, அனிருத் மீது பெண்கள் அமைப்பினர் புகார் செய்தனர். இந்த புகார்களின் பேரில் அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக  நேரில் ஆஜராகும்படி  ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்புவுக்கும், அனிருத்துக்கும் 2 முறை சம்மன் அனுப்பினர். இதையடுத்து அனிருத் கடந்த மாதம் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் சிம்பு போலீஸ் நிலையத்தில் ஆஜராக கால அவகாசம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, சிம்பு நாளை மறுநாள் (24ஆம் தேதிக்குள்) கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சிம்பு, உடைபட்ட மூக்குக்கு ஒட்டுப்பிளாஸ்திரி போட்டுக்கொண்டு, இன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்ற சிம்பு, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, காலை 10  மணியளவில் காட்டூர் போலீஸ் நிலையத்தில் தந்தை டி.ராஜேந்தருடன் நேரில் ஆஜரானார்.

அவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ்  ஆகியோர் பீப் பாடல் குறித்து விளக்கம் கேட்டனர். ஆபாச பாடலை எழுதியது யார்? இந்த பாடலுக்கு இசையமைத்தவர் யார்? நீங்கள் தான் பாடலை பாடினீர்களா? பாடல் இயற்றப்பட்ட இடம் எங்கு உள்ளது? பாடலை இசையமமைத்தபோது உடனிருந்த கலைஞர்கள் யார்? இணையதளத்தில் பாடலை வெளியிட்டது யார்? என்பன உள்ளிட்ட 35 கேள்விகளை சிம்புவிடம் அவர்கள் கேட்டார்கள். இவற்றுக்கான பதில்களை சிம்பு அளித்ததாக தெரிகிறது.