“உங்கள் மன்னிப்பை ஏற்கிறேன்; விளக்கத்தை ஏற்க இயலாது”: ஆளுநருக்கு பெண் நிருபர் பதில்!

மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அவசர அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் புரோகித். அந்த செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து புரோகித் எழுந்தபோது, தி வீக் இதழின் நிருபர் லட்சுமி சுப்ரமணியம், “பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டில் உங்களுக்குத் திருப்தி இருக்கிறதா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளிக்காத புரோகித், லட்சுமியின் கன்னத்தை குறும்பாகத் தட்டிவிட்டுச் சென்றார். இதனால் கோபமடைந்த லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கண்டனம் தெரிவித்தார். பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து புரோகித்துக்கு கடிதம் அனுப்பின.

இதனை அடுத்து, வருத்தம் தெரிவித்தும் மன்னிப்பு கோரியும் லட்சுமிக்கு புரோகித் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் நான் எழுந்து புறப்படும்போது நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். அந்தக் கேள்வி சிறப்பான கேள்வியாக எனக்குப் பட்டது. நீங்கள் கேட்ட கேள்வியைப் பாராட்டும் விதமாக, உங்களை பேத்தி போல கருதி கன்னத்தில் தட்டினேன். கடந்த 40 ஆண்டுகளாக நானும் இந்தத் தொழிலில் இருப்பதால், ஒரு பிரியத்திலும் பத்திரிகையாளராக உங்கள் செயலைப் பாராட்டும் விதத்திலும் அவ்வாறு செய்தேன்.

இந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் வருத்தமடைந்திருக்கிறீர்கள் என்பது உங்கள் மின்னஞ்சலில் இருந்து தெரிகிறது. இதனால் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவிப்பதோடு மன்னிப்பும் கேட்கிறேன். இதை ஏற்று பதில் மின்னஞ்சல் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்று புரோஹித் கூறியிருக்கிறார்.

ஆளுனரின் இந்தக் கடிதத்திற்குப் பதிலளித்திருக்கும் நிருபர் லட்சுமி, பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது குறித்து வருத்தம் தெரிவித்து நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன். இருந்தாலும், நான் கேட்ட கேள்வியைப் பாராட்டுவதற்காக நீங்கள் அப்படிச் செய்ததாக சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

 

Read previous post:
0a1c
மணப்பெண்ணை தேர்வு செய்யாமல் நழுவிய “எங்க வீட்டு மாப்பிள்ளை” ஆர்யா!

‘கலர்ஸ் தமிழ்’ என்ற புதிய தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான தொடர் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. நடிகர் ஆர்யாவை மணக்க விரும்பும் 16 பெண்களிலிருந்து தனக்கு ஏற்ற

Close