ஜெயலலிதா பற்றிய வதந்தி வழக்குகள் எண்ணிக்கை: 52ஆக உயர்வு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக முதலில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஜெயலலிதா பற்றிய வதந்தி வழக்குகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுவதாக அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆன் லைன் மூலமும் பலர் புகார் கொடுத்தனர். இந்தப் புகார்களின் அடிப்படை யில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 43 வழக்குகள் பதிவு கைது நடவடிக்கையில் இறங்கினர்.

ஜெயலலிதா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி, காந்திநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்சர்மா, மதுரை பாண்டியன் நகரை சேர்ந்த மாடசாமி ஆகிய 2 பேரை கடந்த 9-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 153, 505(1), 505(2) ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சதீஷ் சர்மா, எம்.சி.ஏ. படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஏ.சி. மெக்கானிக்கான மாடசாமி, ‘தமிழ் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பெயரில் முகநூலில் புதிய பக்கத்தை உருவாக்கி, அதில் அப்போலோ மருத்துவமனை பணியாளர் போல பேசி, வதந்தியை பரப்பியிருக்கிறார். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சமூக ஊடகங்களில் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக மேலும் 9 வழக்குகளை இன்று (புதன்கிழமை பதிவு) செய்தனர். இந்த வழக்குகள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராஜா, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட 9 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.