எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சென்னை அப்போலோவில் என்ன வேலை? ஒண்ணுமே புரியல…!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு திடீரென சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளது. “தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது” என்று அப்போலோ நிர்வாகம் கூறிவரும் நிலையில், எய்ம்ஸ் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு எதற்காக வந்திருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு ஏற்பட்ட நோய்த் தொற்றை சரி செய்யும் வகையில் அப்போலோ மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறிவந்தது.

இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே கடந்த (செப்டம்பர்) 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அவரது ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (அக்டோபர் 3, 4 தேதிகளில்) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வருக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றை சரிசெய்வதற்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. செயற்கை சுவாச உதவியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (5ஆம் தேதி) அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்திக்குறிப்பு எதையும் வெளியிடவில்லை. இதனால், ‘முந்தைய நாள் செய்திக்குறிப்பில் உள்ள நிலவரமே நீடிக்கிறது, ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு எதுவும் இல்லை’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கையில், ‘தமிழ் டாட் த ஹிண்டு டாட்காம்’ கீழ்க்கண்ட செய்தியை இன்று வெளியிட்டு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

“முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழுவினர் நேற்று (5ஆம் தேதி) சென்னை வந்தனர். நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.சி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகிய 3 பேர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் டாக்டர் நிதிஷ் நாயக் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மருத்துவ ஆலோசகர் ஆவார்.

“முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சிகிச்சைகள் பற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் ஆராய்வார்கள். தற்போது சிகிச்சை அளித்துவரும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசித்து, அடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் தொடர்பான ஆலோசனைகளை அவர்கள் வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

“மேலும், முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனைச் சேர்ந்த சிறப்பு டாக்டர் ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வரக்கூடும் எனவும் கூறப்படுகிறது” என்கிறது ‘தமிழ் டாட் த ஹிண்டு டாட்காம்’.

அப்போலோ நிர்வாகக் கூற்றின்படி, ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் ஓய்வெடுத்து வரும் நிலையில், ஏதோ அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, அப்போலோ மருத்துவர்களின் கைமீறி போய்விட்டது என எண்ணத் தூண்டும் வகையில், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே எய்ம்ஸ் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அப்போலோவுக்கு வந்திருப்பதாகவும், லண்டன் சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் வர இருப்பதாகவும் செய்தி வெளியிட்டு, “வதந்தி”யை பரப்பி, பீதியை ஏற்படுத்தியுள்ளது ‘தமிழ் டாட் த ஹிண்டு டாட்காம்!

வதந்தியை பரப்பும் ‘தமிழ் டாட் த ஹிண்டு டாட்காம்’ மீது நடவடிக்கை எடுங்கள், ஆபீசர்…!

அது ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்களின் டாட்காம் என்றெல்லாம் பார்க்காதீர்கள்…!

என்னா ஒரு வில்லத்தனம்…?

Read previous post:
0a
சென்னை பாஜக அலுவலக முற்றுகை: பெண்களை தரதரவென இழுத்து சென்றது போலீஸ் – வீடியோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவிட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். குழந்தைகள்,

Close