ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் எந்த மாற்றமும் வராதாம்: அமைச்சர் கூறுகிறார்!

தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் கூறியதாவது:

”அனைவருக்குமான உணவு பாதுகாப்பை வழங்குகிற ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் இதுவரை உள்ள நடைமுறையே பின்பற்றப்படும். அதில் எள்ளளவும் மாற்றமில்லை.

பொது விநியோக திட்டத்தில் மாற்றம் என வதந்தி பரவுகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. வழக்கம்போல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்

தமிழக முதல்வர் இட்ட ஆணையின் படி நாங்கள் பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் அனைவருக்குமான உணவு பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் அல்லது தேவைப்படும் போதெல்லாம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் உணவுப் பொருட்கள் சென்றடைவது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பொது விநியோக திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், விலையில்லா அரிசி திட்டம் என்ற இரண்டு திட்டங்களை செயல்படுத்தும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சில நிபந்தனைகளுடன்தான் தமிழகம் இணைந்தது. உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது. குடும்ப அட்டைகளை நீக்குவதற்கான அடிப்படை விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது” என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.