நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: “நான் நலமாக உள்ளேன்!” – ஆடியோ வெளியீடு

சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “நான் நலமாக உள்ளேன்” என கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த 10 ஆண்டுகாலமாக உடல்நிலை பாதிப்பு இருந்து வருகிறது. 2011ஆம் ஆண்டு சிறுநீரக பாதிப்பு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்கு நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்குச் சிகிச்சை முடிந்து ஒரு வாரம் ஓய்வில் இருந்த ரஜனிகாந்த், அதன் பின்னரே வீடு திரும்பினார். அப்போதுமுதல் அவ்வப்போது உடல்பரிசோதனை செய்துகொள்வதும், சிகிச்சை எடுத்துக்கொள்வதுமாக இருந்து வந்தார்.

கடந்த ஆண்டு ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், கடந்த (அக்டோபர்) 28ஆம் தேதி ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது. மேலும், அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என்றும், இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

இதன்படி, சிகிச்சை முடிந்து காவேரி மருத்துவமனையில் இருந்து ரஜினி நேற்று (அக்டோபர் 31ஆம் தேதி) இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஹூட் சமூகத்தளத்தில் ரஜினி இன்று வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “சிகிச்சை முடிந்தது. நான் நலமாக உள்ளேன். இரவு தான் நான் வீடு திரும்பினேன். எனது உடல்நலனுக்குப் பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனது நலன் குறித்து விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 4ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
1
“ஆர்யா ஒரு பாக்ஸர் போல உண்மையாகவே என்னை  அடித்து விட்டார்!” – ‘எனிமி’ பட நிகழ்வில் விஷால் பேச்சு

விஷால் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ' எனிமி'. இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய

Close