தமிழகம், புதுவையில் வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18+1 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை 2-வது கட்டத்தில், ஏப்ரல் 18ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அறிவிக்கை இன்று (மார்ச் 19-ம் தேதி) வெளியிடப்படுகிறது. இதையடுத்து, இன்றே வேட்பு மனுத் தாக்கலும் தொடங்குகிறது.

வேட்பு மனுக்களை வரும் 26ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை பெறுவதற்காக அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய லாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களும் வேட்பு மனுக்கள் பெறப்படாது.

வேட்பு மனுவுடன், மக்களவைத் தொகுதிக்கு பொது வேட் பாளர் ரூ.25 ஆயிரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வேட்பாளர் ரூ.12 ஆயிரத்து 500 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். சட்டப்பேரவை தொகுதிக்கு பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் என்றால் ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். இந்த வைப்புத் தொகையை, ரொக்கமாகவோ ரிசர்வ் வங்கி சலானாகவோ மட்டுமே செலுத்த முடியும். காசோலை ஏற்கப்பட மாட்டாது.

மேலும், வேட்பு மனுவுடன் படிவம் 26-ல் வழக்கமான சுய விவரம், சொத்து உள்ளிட்ட தகவல்களுடன் புதிய விவரங்களையும் இணைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்குமுன், ஒரு ஆண்டுக்கு மட்டுமே வருமான வரி கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இம் முறை 5 ஆண்டுகள் வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பிரிக்கப்படாத குடும்ப சட் டத்தின்படியான சொத்துக்கள் வேட்பாளருக்கு இருந்தாலோ, வெளிநாட்டில் சொத்துக்கள் இருந்தாலோ அவற்றின் விவரங்களை அளிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்கள் மீதான தண்டனை வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிடுவதுடன், வேட்பு மனு தாக்கல் நாளில் இருந்து, வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன் வரை 3 முறை உள்ளூர் நாளிதழ், தொலைக் காட்சியில் வழக்குகளை விளம்பரப்படுத்த வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், கட்சியிடம் வழக்கு விவரங்களை அளித்து, சம்பந்தப்பட்ட கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் தொடர்பான வழக்குகளை விளம்பரமாக வெளியிட வேண்டும்.

வேட்பு மனுதாக்கல் செய்ய வேட்பாளர் செல்லும்போது, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத் துக்கு 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அத்துடன், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்குள் வேட்பாளர் மற்றும் 4 பேர் என 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், வேட்பாளர்கள் அனுமதி தொடர்பாக கேட்டபோது, ‘‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி, பதிவு செய்த கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் என யார் வந்தாலும், முதலில் வருபவர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும்’’ என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.