ஜெ. மரணத்தில் சந்தேகம் நிலவுவதற்கு உயர் நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும்!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூகவலைத் தளங்களில் பலர் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இதே சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தில் இன்று சந்தேகம் நிலவுவதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறும் அரசியல் நோக்கர்கள், அதற்கு காரணமாக, முன்னர் ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கையும், அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் / வதந்திகள் பரவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால் அக்டோபர் 3ஆம் தேதி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், “ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும்” என டிராபிக் ராமசாமி கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் அக்டோபர் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிடும் செய்திக் குறிப்புகளை மனுதாரர் பார்க்கவில்லையா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை பயன்‌படுத்தக் கூடாது” என டிராபிக் ராமசாமியை கண்டித்த நீதிபதிகள், “இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அன்று டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்று, முறையான உத்தரவு பிறப்பித்திருந்தால், “ஜெயலலிதாவின் மரணத்தில் எங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று சொல்லியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

மத்திய, மாநில அரசுகளுக்கும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எனில், உயர்நீதிமன்றத்துக்கு யார் நோட்டீஸ் அனுப்புவது…?

அமரகீதன்