ரொமிலா தாபரிடம் பயோ டேட்டா கேட்கும் வெட்கங்கெட்ட சங்கிகள்!

ரொமிலா தாபர் பெயரை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மதிப்புக்குரிய வரலாற்று அறிஞர். இருபதுக்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை எழுதியவர். கணக்கற்ற ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தவர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெஎன்யு) பேராசிரியையாக ஓய்வு பெற்றுவிட்டு Professor Emerita என்ற கவுரவப் பதவியில் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் அவர் பணியை நீட்டிக்க வேண்டுமா, இல்லையா என்ற முடிவெடுப்பதற்காக ஜெஎன்யு அவரிடம் உங்கள் பயோ டேட்டாவை அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறது. இது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பயோ டேட்டா கேட்பது சரிதானே, அதில் என்ன தவறு என்ற கேள்வி எழலாம்.

Professor Emerita என்பதன் அர்த்தமே ஒரு பேராசிரியர் மாபெரும் சாதனைகளை புரிந்து விட்டதன் காரணமாக கொடுப்பது. அதாவது ஒரு இயக்குனர் தாதா சாஹேப் பால்கெ விருது பெறுவது மாதிரி.

வேறு ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஒரு தமிழ் இயக்குனர் தன் அடுத்த படத்துக்கு ரஹ்மானை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அவருக்கு ஃபோன் போட்டு ‘உங்க பழைய ஆல்பம் சிடி எல்லாம் கொஞ்சம் அனுப்புங்க. கேட்டுட்டு திரும்ப லைனுக்கு வர்றேன்!’ என்று கேட்டால் எப்படி இருக்கும்? ஏறக்குறைய அந்த மாதிரிதான் இது.

காரணம் என்ன: ஆரம்பம் முதலே ரொமிலா தாபர் பாஜகவின் முக்கிய விமர்சகராக இருந்து வந்தவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ்சின் ஜல்லியடி வரலாற்று கட்டுக் கதைகளை எல்லாம் கிழித்து எறிந்து வந்தவர். வரலாற்று வாதங்களில் அவர் பக்கமே இந்த ஆர்எஸ்எஸ் ‘ஆய்வாளர்களால்’ நெருங்க முடியவில்லை. வழக்கம் போல அவரை கம்யூனிஸ்ட் எழுத்தாளர் என்று பட்டம் கட்டிவிட்டு பாரத மாதாவுக்கு ஜெ போட போய் விட்டார்கள்.

(அவரின் ஒன்று விட்ட சகோதரர்தான் மோடியை தொண்டை வறள வைத்து தண்ணீர் கேட்க வைத்த கரண் தாபர் என்பது கூடுதல் விசேஷம்.)

இதெல்லாம் அதிகாரத்தை உறுத்திக்கொண்டே இருந்தது போல. அதுதான் இப்படி எல்லாம் செய்து கடுப்பேற்ற தூண்டி இருக்கக் கூடும்.

இவர்களை சொல்லியும் குற்றமில்லை. இவர்களுக்கு ரொமிலா தாபர் போன்றவர்களின் அருமை எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. சுதர்ஷன் ராவ் மாதிரி ‘ப்ரொபஸர்கள்தான்’ இவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். மோடி பொறுப்பேற்றதும் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்கு (ICHR) ராவ்-வை தலைவராக நியமித்தார்கள். அப்போதே அவர் தகுதி கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. அப்படி எல்லாம் சந்தேகப்படாதீங்க என்பது மாதிரி அவரே ‘ராமாயணம் ஒரு வரலாற்று சம்பவம்’ என்று திருவாய் மலர்ந்தார். அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியே எடுப்பேன் என்றும் சவால் விட்டார். விட்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. இன்னமும் ஒரு ஆதாரம் கூட வரவில்லை.

ஆனால் அந்த சுதர்ஷன் ராவ் ராஜினாமா செய்தபோது அவர் கடிதத்தை அரசு வாங்க மறுத்தது. ராஜினாமா கொடுத்த பின்பும் கொஞ்ச நாள் தலைவராக தொடர்ந்தார் அவர். அதாவது ஒரு புத்தகம் கூட எழுதி இராத, ஒரு peer-reviewed journal கூட பதிப்பித்திராத ஒருவருக்கு அந்த அளவு மரியாதை கிடைக்கிறது. தான் வகிக்கும் பதவியின் மாண்பை கெடுக்கும் வகையில் ராமாயணம் பற்றி உளறிவிட்டுக்கூட பதவியில் தொடர முடிகிறது. காரணம் ஒரே தகுதி, ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமானவர்.

அதேநேரம் ஆர்எஸ்எஸ்சை பகைத்துக் கொண்ட ஒருவர் டஜன் கணக்கில் புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பித்திருந்தாலும், சர்வதேச அளவில் மதிப்பு பெற்றிருந்தும், அவரை பயோ டேட்டா அனுப்புங்கள் என்று கேட்க முடிகிறது.

(படத்தில் ரொமிலா தாபருடன் நான், தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் எடுத்தது.)

Sridhar Subramaniam