“மோடி சொன்ன 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை!” – மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

கறுப்புப் பண ஒழிப்பு வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், மத்திய அரசின் குளறுபடிகள் எல்லாம் கறுப்புப் பண முதலைகளுக்கு எந்த நெருக்கடியையும் தராமல், ஏழை மக்களுக்கு துன்பத்தை கொடுத்திருப்பதை யாராலும் மறக்க முடியாது.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் வருமான வரித்துறையினர், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடத்தினர். அதற்கு முன்பு மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டது. மேலும் சேலம் மற்றும் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகள் எல்லாம் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மட்டுமா அல்லது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இவை எல்லாம் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் திடீரென்று அடங்கி போய்விட்டன என்பது புரியாத புதிராக இருக்கிறது. இத்தனை நாள் பரபரப்பான செய்தியாக தமிழகத்தில் நடைபெற்ற சோதனைகள், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?

யாரைக் காப்பாற்ற இந்தத் தயக்கம் என்பது மூடி மறைக்கப்பட்டு, மூடு பனியாகவே இருக்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரால் மக்களைத் துன்புறுத்திய மத்திய அரசின் அலட்சியமான போக்குக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் நடந்த போராட்டங்கள் மற்றும் தொடர்ந்து நிலவும் எதிர்ப்புகளை சமாளிக்க இந்தச் சோதனைகள் நடந்ததா என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

‘எல்லாம் சரியாகி விடும். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். ஆனால், 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை. இந்திய பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, நாட்டின் வளர்ச்சி வீழ்ச்சியை சந்திக்கும் அபாயக் கோட்டில் நிற்கிறது என்று பிரபல பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

எனவே, மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்காமல், வங்கி செயல்பாடுகளை சீர் செய்ய வேண்டும். வங்கிகளுக்கு தேவையான புதிய ரூபாய் நோட்டுக்களை உடனடியாக வழங்கி, கட்டுப்பாடுகளை தளர்த்தி சகஜமான வங்கி செயல்பாடுகள் திரும்ப உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தால் பொருளாதாரத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது, எத்தனை கருப்பு பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.