ஜெயலலிதா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டம்: அமைச்சர்கள் அழுதார்களா?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசை நிர்வாகம் செய்வது யார் என திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். ‘அரசுப் பணிகளை கவனிக்க பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக பொறுப்பு ஆளுநர் பொறுப்பு வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என தெரிவித்திருந்தார்.

முதல்வரின் பொறுப்புகளை ஓ.பன்னீர்செல்வம் ஏற்ற பிறகு அவரது தலைமையில் முதல்முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. 10.30 மணி வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவிரி நீர் பங்கீட்டு விவகாரம், காவிரி நதிநீர் தொடர்பான உயர்நிலை தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி நியமித்தல், அதற்காக அவசரச் சட்டம் இயற்றுதல், தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜெயலலிதா இல்லாமல் பதவி பிரமாணம் எடுத்தாலோ, அமைச்சரவை கூட்டம் நடந்தாலோ அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கள் தலைவரை எண்ணி உருக்கமாக அழுவது வாடிக்கை. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர் இல்லாமல் பதவி ஏற்ற அத்தனை அமைச்சர்களும் பதவி ஏற்பு நிகழ்ச்சி மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுத காட்சியை உலகெங்கும் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. அதுபோல் இன்று ஜெயலலிதா இல்லாமல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்களின் முகங்கள் சோகம் தோய்ந்து இருந்தன. ஆனால், யாரும் அழுதார்களா என தெரியவில்லை.