மனிதத்தை நேசித்த தி.வி.க. நிர்வாகி ஃபாருக் படுகொலை: முஸ்லிம் இளைஞர் சரண்!

கோவையில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அன்சாத் என்ற முஸ்லிம் இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ஃபாரூக் (வயது 31). இரும்பு வியாபாரம் செய்து வந்த இவர், திராவிடர் விடுதலை கழக பகுதிச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

ஃபாரூக் நேற்று (வியாழன்) இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. போனில் பேசியதும், அவர் தனது மொபட்டை எடுத்துக்கொண்டு உக்கடம் கழிவுநீர் பண்ணை சாலை வழியாக சென்றார்.

அப்போது ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், ஃபாருக்கை வழி மறித்து, கழுத்தை அறுத்தும், வயிற்றில் கத்தியால் குத்தியும் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டது.

இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இக்கொலை தொடர்பாக போத்தனூரை சேர்ந்த அன்சாத் (31) என்பவர் கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். மேலும் 3 பேரை தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஃபாரூக், கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக பேசி வந்ததாகவும், இதை சகித்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரை எதிரியாக பாவித்து வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பான ஃபாரூக் முகநூல் பதிவு:

0a

எனவே, ஃபாரூக்கை எதிரியாக பாவித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது:.

ஃபாரூக் கொலைக்கு மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.