“அதனால் தான் கம்யூனிஸ்ட் கம்பீரமானவன்!”

நான் பார்த்தவரையில் இந்த political correctness-ம் அதிகப்படியான நியாய உணர்ச்சியும் கொண்டவர்கள் பெரும்பான்மையானோர் கம்யூனிஸ்ட்டுளாகவே இருக்கின்றனர்.

பெரும்பான்மையானோர் என்றுதான் சொல்லி இருக்கிறேன். பின்னூட்டத்தில் வந்து தா.பா.வை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என தயவுசெய்து கேட்க வேண்டாம். மேலும் கட்சிசார் கம்யூனிஸ்ட்டுகளை மட்டும் சொல்லவும் இல்லை. அமைப்புகள் சார்ந்தவர்களையும் போராட்டக்குழுக்களை சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியே சொல்கிறேன்.

Irritatingly honest, ridiculously knowledged என்றெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளை சொல்லலாம். அதுதான் அவர்களுக்கு பலமும் பலவீனமும். அந்த அளவுக்கு நேர்மை, நியாயம், லட்சியம் பேசுவதால் இயல்பான மக்களாக இருக்க முடிவதில்லை. அதனால்தான் இயல்பான மக்கள் இவர்களை நெருங்க முடிவதில்லை. இயல்பான மக்கள் இயல்பான குறைநிறைகள் கொண்டிருப்பார்களே!

அதே நேரம் பலம் என்னவெனில், ஒரு பிரச்சினை என வந்தால் மக்கள் கண்ணை மூடி கொண்டு தீர்வு வேண்டி வந்து நிற்பது கம்யூனிஸ்ட்டிடம்தான். ஓட்டு மட்டும் போட மாட்டார்கள் என்பது வேறுவிஷயம். ஆனால் கம்யூனிஸ்ட் மாத்திரம்தான் நமக்காக உண்மையாக போராடி, தீர்வு பெற்று தருவான் என மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

உங்கள் ஊரின் முதல் தெருவிளக்கு வந்தது எப்படி என விசாரித்து பாருங்கள். ஒரு கம்யூனிஸ்ட்டின் போராட்டம் இருக்கும். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, சாலை இல்லாதது என எந்த பிரச்சினையும் எடுத்து பாருங்கள். அதன் பின் ஒரு போராட்டம் இருக்கும். அதற்கு பின் ஒரு கம்யூனிஸ்ட் இருப்பான்.

அவனே அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தலிலும் நின்றிருப்பான். மக்கள் தோற்கடித்திருப்பார்கள். திரும்ப பிரச்சினை வரும்போது அவனிடம்தான் போய் நிற்பார்கள். திரும்ப அவனும் இறங்கி வேலை செய்வான். மக்கள் அரசியல்வாதிகளாகி பல காலம் ஆகிவிட்டது.

கம்யூனிஸ்ட்டுகள் விந்தையான பிறவிகள். அவர்கள் இவ்வுலகுக்கானவர்கள் கிடையாது. இது survival of the fittest பேசுகிற உலகம். சிக்னலில் கூட நிற்காது, குறுக்கும் மறுக்குமாக வண்டி ஓட்டி, தப்பிக்கும் மக்களை கொண்டது. இந்த அம்மணாண்டிகளுக்கு நடுவில் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்தான் கோவணாண்டிகள்.

அதனால்தான் ஒருமுறை தோழர் ஒருவருடன் விவாதிக்கையில் கூட சொன்னேன்:

கம்யூனிஸ்ட்டை வீழ்த்த முடியாது. ஏனெனில் அவன் ஏற்கனவே, அவனுக்கு அவனே பல சோதனைகள் நடத்தி, கேள்வி கேட்டு, ஆராய்ந்து, கண்டுணர்ந்து, தப்பெனில் தப்பை தயங்காமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வளர்த்து, பின்னரே கம்யூனிஸ்ட்டு ஆனவன். பணம் கொடுத்து, மிரட்டல் விடுத்து, சித்திரவதை செய்து, குடும்பத்தை காட்டி மிரட்டி, உயிர் பயம் ஏற்படுத்தி என எந்த வகையிலும் அவனை வீழ்த்த முடியாது.

ஒரு கம்யூனிஸ்ட்டை வீழ்த்த வேண்டுமெனில் ஒரே வழிதான். அவனை கொல்வது. அதை தவிர வேறு எது செய்தாலும் அவன் மசிய மாட்டான். Because, he’d always be right and strong in his head.

அதனால்தான் கம்யூனிஸ்ட் கம்பீரமானவன்!

RAJASANGEETHAN JOHN

Read previous post:
0a
புரூஸ் லீ – விமர்சனம்

எவரையும் சுண்டி இழுக்கக் கூடிய, காந்த சக்தி வாய்ந்த பெயர் புரூஸ் லீ. இப்பெயரை தலைப்பாகக் கொண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்...

Close