ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுகவின் இரு அணிகளிடமும் விசாரணை நடத்திய பிறகு தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சொத்துக்குவிப்பு குற்றவாளி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் அவர் முதல்வராக பதவியேற்க முயன்றபோது, கட்சியில் பிளவு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என இவர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றொரு மனு அளித்தனர். அதேபோல, சசிகலா தரப்பிலும் இரட்டை சின்னம் கோரி மனு தரப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இன்று (புதன் கிழமை) விசாரணை நடத்தப்பட்டது.

இதில், பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான சி.எஸ்.வைத்தியநாதன், எஸ்.கிருஷ்ணகுமார், பி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாதாடினர். அப்போது மைத்ரேயன் உள்ளிட்ட 11 எம்.பி.க்கள் உடனிருந்தனர். சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களான அரிமா சுந்தரம், மோகன் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். இவர்களுடன் வழக்கறிஞர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான எம்.வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோரும் வாதிட்டனர். அப்போது எம்.தம்பிதுரை, அன்வர் ராசா உள்ளிட்ட எம்.பி.க்களும் இருந்தனர். தமிழக அமைச்சர்கள் சண்முகம், உடுமலை ராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகிய மூவரும் வந்திருந்தனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய வாதம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முதலில் பன்னீர்செல்வம் தரப்பில் சுமார் 90 நிமிடம் வாதிடப்பட்டது. பிறகு சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இது உணவு இடைவேளைக்கு பிறகும் தொடர்ந்தது. பிறகு இரு தரப்பினரும் அடுத்தடுத்து தங்கள் பதில் வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து வாதங்கள் நிறைவு பெற்றன.

இது குறித்து சசிகலா அணி தரப்பில் எம்.பி. நவநீதிகிருஷ்ணன் கூறும்போது, ‘‘இன்று சின்னம் மீது மட்டுமே வாதம் நடைபெற்றது. எனவே, இதன் மீதான தீர்ப்பு மட்டுமே ஆணையம் வெளியிடும். அதிமுக உடையவில்லை. மாறாக சில உறுப்பினர்கள் மட்டுமே வெளியேறி உள்ளனர். எங்கள் பக்கம் பெரும்பாலான எம்எல்ஏ மற்றும் எம்.பி.க்கள் உள்ளதால் சின்னம் எங்களுக்கு கிடைப்பது உறுதி’’ என்றார்.

பன்னீர்செல்வம் தரப்பில் மைத்ரேயன் கூறும்போது, ‘‘பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதில் விதிமீறல்கள் உள்ளன. இந்நிலையில், அவர் ஆர்.கே.நகர் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்க முடியாது. சிறையில் இருப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், அவர் ஆர்.கே.நகருக்கான வேட்பாளரையும் தேர்தெடுக்க முடியாது’’ என்றார்.

இரு தரப்பு வாதங்களைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது. இது பற்றி தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது:

ஓரிரு நாளில் தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை. அதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் 23ஆம் தேதி (நாளை) ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக அவர்கள் சின்னத்தை பரிந்துரை செய்யலாம்.

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக என்ற பெயரை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது. ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றின் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சசிகலா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரனிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம். இரட்டை இலை சின்னத்தையும் கட்சியையும் நிச்சயம் போராடி மீட்போம்’’ என்றார்.

ஓபிஎஸ் தரப்பில் கேட்டபோது, ‘‘இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம். கட்சியையும் சின்னத்தையும் மீட்போம்’’ என்றனர்.

அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 2-வது முறையாக தற்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக ஜெ., ஜா என இரு அணிகளாக பிளவுபட்டது. இதனால், 1989 தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது ஜானகி அணியினர் இரட்டைப் புறா சின்னத்திலும், ஜெயலலிதா அணியினர் சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். தற்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதால் 2-வது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.