“பல மடங்கு விறுவிறுப்பான படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்” – நடிகர் ஆர்கே

‘எல்லாம் அவன் செயல்’ படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக் காப்பாற்றவில்லை. படத்தின் அனல் பறக்கும் வசனங்களும் ஆர்கேவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்த படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கியது.

இப்போது அதே ஆர்கே – ஷாஜி கைலாஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் நாளை (மார்ச் 24) ரிலீஸ் ஆகிறது. முந்தைய படத்தைவிட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்றார் ஆர்கே.

“இந்த கதையே ஒரு ரயிலில் நடப்பது போல் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த உடனேயே வேகமெடுக்கும். அந்த வேகம் இறுதிக் காட்சியில் ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டுவிடும். எல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறுப்பை படத்தில் அனுபவிக்கலாம்” என்றார் அவர்.

ஏன் அடிக்கடி பார்க்க முடியவில்லை? என்று கேட்டதற்கு, “எனக்கு சினிமா என்பது பேஷன். பணத்துக்காக நடிக்கவோ, படம் எடுக்கவோ வரவில்லை. சினிமா மீதான காதல் மட்டுமே என்னை சினிமாவுக்குள் ஈர்த்தது. எனவே என்னை பாதிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

சம்பாதிக்கும் நோக்கில் சினிமாவுக்கு வராத ஆர்கேவே சினிமாவில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்து அதற்கு ஹிட் பாக்ஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். சினிமாக்காரர்கள் ஆர்கேவையும் அவரது புதிய முயற்சியையும் பயன்படுத்திக்கொள்வது அவர்களுக்கு நல்லது.