நடிகர் கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
கமல்ஹாசன் தனது புதிய படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என பெயர் சூட்டியிருக்கிறார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் ரவிக்குமார் கூறியிருப்பது:
“தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.
முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும்போது மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தலைப்பிலோ வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.”