சாதனை படைத்து வருகிறது ரஜினியின் ‘கபாலி’ டீஸர்!

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தின் டீஸர் இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக யூ-டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது முதல் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலராலும் இந்த டீஸர் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் #KabaliTeaser என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி இருக்கிறது. இயக்குநர் ராம்கோபால்வர்மா, ராஜமெளலி போன்ற இதர மொழி இயக்குநர்களும் ‘கபாலி’ டீஸரை பாராட்டி புகழ்ந்திருக்கிறார்கள்.

இந்த டீஸரில், “தமிழ் படங்களில் இங்கே (முகத்தில்) மரு வச்சிக்கிட்டு, மீசையை முறுக்கிட்டு, லுங்கியை கட்டிக்கிட்டு, நம்பியார் கூப்ட்டவுடனே குனிஞ்சி ‘சொல்லுங்க எஜமான்’ அப்படினு வந்து நிப்பானே… அந்த மாதிரி கபாலினு நினைச்சியாடா….? இது கபாலி…டா…!” என ரஜினி பேசும் வசனம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

டீஸர் முடியும் தருவாயில் ரஜினி கூறும் “மகிழ்ச்சி” என்ற வசனமும் வெகுவாக ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. டீஸரைப் பார்த்த பலரும் தங்களுடைய பதிலாக “மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்று பதிவிடுவதை சமூக வலைத்தளத்தில் காண முடிகிறது.

சில மணி நேரத்திற்கு ஒரு முறை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற கணக்கு யூ-டியுப் தளத்தில் காட்டப்படும். அதன்படி ‘கபாலி’ டீஸர் வெளியான 5 மணி நேரத்தில் சுமார் 7லட்சத்து 84ஆயிரத்து 842 பேர் பார்த்திருக்கிறார்கள். குறைந்த நேரத்தில் அதிகப் பேர் விருப்பம் தெரிவித்த முதல் டீஸர் என்ற சாதனையையும் ‘கபாலி’ டீஸர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ‘கொலவெறி’ பாடல் மட்டுமே அதிகப் பேர் பார்த்த வீடியோ என கூறப்படுகிறது. 4 மணி நேரத்திலேயே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருப்பதால், அச்சாதனையை ‘கபாலி’ டீஸர் முறியடிக்கும் என்கிறார்கள்.

‘கபாலி’ டீஸருக்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.