தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவ.19ல் தேர்தல்!

கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக்குறைவால் காலமானார். அவர் பதவி ஏற்கும் முன்னரே காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியானது.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 3ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற நவம்பர் 5 கடைசி நாள். நவம்பர் 19ஆம் தேதி வாக்குப்பதிவும், நவம்பர் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.