ராகுல் காந்தியின் அப்போலோ விசிட்: மோடி அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார்கள். அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்தார்கள். பின்னர், “முதல்வர் குணமடைந்து வருவதாக சொன்னார்கள். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. முதல்வர் விரைவில் குணமடைவார்” என பேட்டியளித்துவிட்டுச் சென்றார்கள்.

அ.தி.மு.க. மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் விடுத்த ரகசிய அழைப்பின் பேரிலேயே, தி.மு.க. கூட்டணியில் இடம் பெறாத இந்த தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து, ஜெயலலிதா தொடர்பான நல்ல தகவலைச் சொல்லிவிட்டுப் போகிறார்கள் என்பதை மிகச் சரியாக யூகித்த அரசியல் நோக்கர்கள் கூட, இரண்டு விஷயங்களை கவனிக்கத் தவறினார்கள். ஒன்று – மத்திய பாஜக அரசின் ஏஜெண்டான தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோவுக்கு திடீர் விசிட் அடித்துவிட்டுச் சென்ற பின்னர் தான் மேற்கண்ட தமிழக தலைவர்கள் அப்போலோவுக்கு அவசரம் அவசரமாக அழைக்கப்பட்டார்கள். இரண்டு – மேற்கண்ட தமிழக தலைவர்கள் அனைவருமே பாரதிய ஜனதா கட்சியை முழுமூச்சாக எதிர்ப்பவர்கள்.

இதற்கிடையே, யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தேறியது. அ.தி.மு.க.வின் எதிரிக்கட்சியாக செயல்படும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அ.தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்தார்.

திருநாவுக்கரசர் மரியாதை நிமித்தம் தானாக வந்து, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகத் தான் அப்போது கருதப்பட்டது. அ.தி.மு.க.வின் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் விடுத்த ரகசிய அழைப்பின் பேரிலேயே அவர் வந்தார் என்பதையும், ஜெயலலிதாவின் இயலாமை நிலையை பயன்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு, சுயநலத்துடன் தமிழக அ.தி.மு.க. ஆட்சிக்கு குடைசல் கொடுக்கத் தொடங்கியிருப்பது குறித்து மருத்துவமனைக்குள் அவருடன் விவாதிக்கப்பட்டது என்பதையும் யாருமே யூகிக்கவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு ‘செக்’ வைக்க, தேசிய எதிர்க்கட்சியாகவும், மாநிலங்களவையில் வலிமையான கட்சியாகவும் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தங்களுக்கு தேவை என அ.தி.மு.க. மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் விடுத்த வேண்டுகோளை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்துக்கு கொண்டு சென்றார் திருநாவுக்கரசர்.

இதனை தொடர்ந்து தான் ராகுல் காந்தி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தனி விமானத்தில் திடீரென சென்னை வந்து இறங்கினார். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. திருநாவுக்கரசரைத் தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரசின் பொறுப்பாளராக இருக்கும் முகுல் வாசினிக் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவருக்கும் சொல்லப்படவில்லை. ஆனால், அ.தி.மு.க.வின் மேலிடத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டிருந்தது. அதனால் தான், தமிழக உயர்அதிகாரிகளால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு, பிற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து 15 நிமிடங்களில் ராகுல் காந்தியின் வாகனம் ஆயிரம் விளக்கிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சேர முடிந்தது.

முன்னதாகவே அங்கு வந்து வாசலில் காத்திருந்த திருநாவுக்கரசர், ராகுல் காந்தியை வரவேற்று மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே சுமார் 40 நிமிடங்கள் இருந்த ராகுல் காந்தி மருத்துவர்களைச் சந்தித்து, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்; ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்குச் சென்று, கண்ணாடிக் கூண்டுக்கு வெளியிலிருந்து அவரை பார்த்தார் என்ற தகவல்கள் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அங்கு அ.தி.மு.க. மேலிடத்துக்கு நெருக்கமானவர்களை அவர் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார் எனபது வெளியாகவில்லை.

எனினும், மருத்துவமனையை விட்டு புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, எந்த பூச்சும் இல்லாமல் ஒரு செய்தியை தெளிவாகச் சொன்னார். அந்த செய்தி அசாதாரணமானது. ஒரு தலைவர் எதிர்முகாமைச் சேர்ந்த ஒரு தலைவரின் உடல்நிலை குறித்து மரியாதை நிமித்தம் கேட்டறிய வந்த இடத்தில் சொல்ல அவசியம் இல்லாதது. அதே நேரத்தில் தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது:

“ஜெயலலிதாவுக்கு என்னுடைய ஆதரவையும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் ஆதரவையும் தெரிவிப்பதற்காகவே நான் வந்திருக்கிறேன். (I came to extend my support and the Congress president’s support to Ms. Jayalalithaa)” என்பது தான் அந்த செய்தி.

இது மத்திய பா.ஜ.க அரசுக்கு ராகுல் காந்தி மறைமுகமாக விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி! ஜெயலலிதாவின் இயலாமை நிலையை பயன்படுத்தி சுயநல சித்துவிளையாட்டில் இறங்க முனையும் மோடி அரசுக்கு விடுத்திருக்கும் செய்தி! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 4 மாதங்களே ஆன அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க எத்தனிக்கும் மோடி – அமித் ஷா – சுப்பிரமணியன் சாமி கும்பலுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிரட்டல் செய்தி!

ராகுலின் அப்போலோ விசிட் குறித்து firstpost.com கூறுகையில், “It looks like Rahul Gandhi undertook this trip to send a message out to the political theatre in Tamil Nadu, and the BJP in particular. Rajya Sabha MP Subramanian Swamy has set the cat among the AIADMK pigeons by writing to the Union Home minister Rajnath Singh that President’s rule should be imposed in Tamil Nadu for six months till such time that Jayalalithaa recovers fully. Swamy in his letter points out that IS sleeper cells have been activated in the southern districts because of an ad hoc administrative situation, leading to a bad law and order situation. Having come to power just four months back, central rule is not a scenario the AIADMK would like and the visit was Rahul Gandhi’s way of conveying to the second rung leadership in AIADMK that the Congress will be on its side, should the BJP on Swamy’s advice, get adventurous” என குறிப்பிட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு வாழ் சமஸ்கிருதர்கள் நடத்தும் இந்துத்துவா ஆதரவு ஊடகங்களோ, “மோடி அரசின் அயோக்கியத் தந்திரங்களை முறியடிக்கும் ஓர் முயற்சியாக ராகுல் காந்தி அப்போலோ வந்தார்” என்ற உண்மையை மூடி மறைத்துவிட்டு, “தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அதிர்ச்சி கொடுக்க வந்தார்” என்கிற ரீதியில் செய்தி வெளியிட்டு, தமிழக மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றன…

 – அமரகீதன்