துப்பறிவாளன் – விமர்சனம்

தமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக வசந்த் என்ற பாத்திரமும் வந்து பட்டையை கிளப்புவார்கள்.

சுஜாதாவுக்கு முன்பே பரபரப்பான துப்பறியும் கதைகள் எழுதி, ‘மர்மக்கதை மன்னன்’ என பெயர் வாங்கியவர் தமிழ்வாணன். அவரது மர்மக்கதைகளில் துப்பறிவாளராக சங்கர்லால் என்ற கதாபாத்திரமும், சங்கர்லாலுக்கே ஐடியா கொடுத்து உதவும் ஆபீஸ் பையனாக கத்திரிக்காய் என்ற கதாபாத்திரமும் வந்து வாசகர்களின் மனங்களை கொள்ளை கொள்வார்கள்..

சுஜாதா, தமிழ்வாணன் போன்றோருக்கெல்லாம் முன்பாக – முன்னத்தி ஏராக – மர்மக்கதைகள் எழுதி புகழ் பெற்றவர் ஆங்கில எழுத்தாளரான சர் ஆர்தர் கொனான் டாயல். அவரது மர்மக்கதைகளில் ஷெர்லக் ஹோம்ஸ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக வாட்ஸன் என்ற கதாபாத்திரமும் வந்து சாகசம் புரிவார்கள்.

இந்த வரிசையில் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன்’ திரைப்படம் வந்திருக்கிறது. இதில் துப்பறிவாளராக கணியன் பூங்குன்றன் (விஷால்) என்ற கதாபாத்திரத்தையும், அவருக்கு உதவும் நண்பராக மனோ (பிரசன்னா) என்ற கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாகப் படைத்து சுவாரஸ்யமான, விறுவிறுப்பான மர்மக்கதை சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.

தன் திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு சுவாரஸ்யமான வழக்கு கையில் சிக்காதா என்று காத்திருப்பவர், தனியார் துப்பறிவாளர் கணியன் பூங்குன்றன் (விஷால்). அவரிடம் தன் நாய்க்குட்டியை சுட்டுக் கொன்ற மர்மநபரை கண்டுபிடிக்குமாறு கூறுகிறான் ஒரு சிறுவன். அதை விசாரிக்க ஆரம்பிக்கும் கணியனுக்கு, அது மிகப் பெரிய சதிவலையின் ஒரு கண்ணி என்ற அதிர்ச்சியூட்டும் விஷயம் தெரியவருகிறது. கூலிக்காக கொலைகளைச் செய்யும் மிகப் பெரிய மர்மக்கும்பல் ஒன்று தான் நாயின் கொலைக்குப் பின்னால் இருக்கிறது என்பதை அறிகிறார். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடித்து, கும்பலின் தலைவனை நோக்கி கணியன் நெருங்க, நெருங்க, பல கொலைகள் நடக்கின்றன. கணியனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதை கடந்து அவர் எப்படி சாதிக்கிறார் என்பது மீதிக்கதை.

அறை முழுக்க புத்தகங்கள்; தன் மூளைக்குச் சவால்விடும் புதிருக்காக நாட்கணக்கில் காத்திருப்பது; உணவுகளை வெறுப்பது, சின்னச் சின்ன க்ளூக்களை வைத்து புத்திசாலித்தனமாக கொலையாளிகளை நெருங்குவது என விஷாலின் கதாபாத்திரம் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக பஞ்ச் டயலாக் பேசி, குத்துடான்ஸ் ஆடி, நம்பமுடியாத சண்டை போடும் நாயகனாக வலம் வந்த விஷாலுக்கு, இது உண்மையிலேயே முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் தான். இந்த அரிய வாய்ப்பை சரியாக புரிந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.

விஷாலின் நண்பராக வருகிறார் பிரசன்னா. இவருக்கு படம் முழுவதும் நாயகனுடன் பயணிக்கும் கதாபாத்திரம். இயல்பாக நடித்து ரசிக்க வைக்கிறார்.

மலையாளத்தில் கவனம் ஈர்த்த நாயகி அனு இமானுவேல் அழகாக இருக்கிறார். ஆனால் இப்படத்தில் அவருக்குப் பெரிதாக வேலை இல்லை. பாக்யராஜ், வினய், ஆண்ட்ரியா, ஜான் விஜய், ஷாஜி, ‘ஆடுகளம்’ நரேன், தலைவாசல் விஜய், சிம்ரன், ஜெயப்பிரகாஷ், அபிஷேக், ரவி மரியா ஆகியோரின் கதாபாத்திரங்கள் கதை நகர்த்தலுக்கும், திருப்பங்களுக்கும் பெரிதும் உதவியிருக்கின்றன.

இயக்குனர் மிஷ்கினின் தனித்துவமான, ஸ்டைலிஷான ‘ஃபிலிம் மேக்கிங்’ இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறது. கேமரா கோணங்களும், காட்சிக் கோர்வைகளும், நடிப்புக் கலைஞர்களை வேலை வாங்கியிருக்கும் விதமும், அளவான – ஆழமான வசனங்களும் நல்ல ரசனைக்குத் தீனி. விபத்துகளைப் போல கொலைகளை நடத்துவது திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது. பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் இல்லாத இரண்டரை மணிநேரப் படத்தில், படம் நெடுக சஸ்பென்ஸை காப்பாற்றியிருப்பது அருமை. இந்த படக்கதையை எந்த மொழிப் படத்திலிருந்து மிஷ்கின் சுட்டிருக்கிறார் என்ற கேள்விக்கும், தேடலுக்கும் இடம் வைக்காமல், படத்தின் ஆரம்பத்திலேயே ஆங்கில மர்மக்கதை எழுத்தாளர் சர் ஆர்தர் கொனான் டாயலுக்கும், அவரது ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்திற்கும் நன்றி தெரிவித்திருப்பதற்கு பாராட்டுக்கள்

மிஷ்கினின் எண்ணத்துக்கு வண்ணம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராம். அரோல் கொரேலியின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். அவரது இசைக்கு மிகப் பெரிய பலம் வயலின் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

துப்பறிவாளன் – மர்மக்கதை விரும்பிகளுக்கு செம விருந்து!