“இனி புதிய படங்களை இணையத்தில் வெளியிட மாட்டேன்”: கைதான இளைஞர் கதறல்!

சமீப காலமாக புதிய திரைப்படங்கள், வெளியான சில மணி நேரங்களிலேயே அவை இணைய தளங்களில் வெளியாகி வருகிறது. இதனால், தொழில் ரீதியில் நஷ்டம் ஏற்படுவதாக திரைத்துறையினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினரிடமும் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், புதிய படங்களை இணைய தளங்களில் பரவ விடுபவர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளார். அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

திருப்பத்தூரில் உள்ள நெட்சென்டர் ஒன்றில் புதுப்படங்கள் சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக விஷாலின் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 மாதங்களுக்கு முன்னர் திருப்பத்தூர் சென்றுள்ளனர். அங்கு கவுரி சங்கர் (24) என்பவர் நடத்தி வந்த நெட் சென்டருக்கு ரகசிய கேமராக்களுடன் சென்றுள்ளனர். பின்னர் வாடிக்கையாளரைப் போல் புதுப்படங்களை டவுன் லோடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர். முதலில் முடியாது என்று கூறிய கவுரி சங்கர், பின்னர் ரூ.200 கொடுத்தால் புதுப்படங்களை சிடியிலும், பென் டிரைவிலும் பதிவேற்றி தருவதாக கூறியுள்ளார். மேலும் தான் ‘தமிழ்கன்’ என்ற இணைய தளத்தில் புதுப்படங்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கவுரி சங்கரை சென்னைக்கு வரவழைத்து போலீஸாரிடம் ஒப்படைக்க அவர்கள் திட்டமிட்டனர். அவரிடம் பேச்சுக்கொடுத்த விஷால் குழுவினர், “உங்களைப்போல் நாங்களும் புதுப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறோம். நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம். இதற்கு பங்கு தொகையாக ரூ.1 லட்சம் தருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கவுரி சங்கர் நேற்று முன்தினம் இரவு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விஷால் குழுவினரின் அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவர்கள் கவுரி சங்கரைப் பிடித்து திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரபுவிடம் ஒப்படைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்துவதற்காக திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மல்லிகா தலைமையில் உதவி ஆணையர் துரை, இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கவுரி சங்கர் திருப்பத்தூர் அருகே உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தை மேஸ்திரி தொழிலாளி. ஏழ்மை நிலையில் உள்ள அவரது குடும்பத்தினர், கவுரி சங்கரை பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைத்துள்ளனர். அதன் பிறகு நெட் சென்டர் வைத்துக் கொடுத்துள்ளனர்.

கவுரி சங்கர் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என தேடியுள்ளார். அப்போது, தனியாக இணைய தள முகவரியுடன் தொழில் தொடங்கி அதில் விளம்பரம் மூலம் வருமானம் சம்பாதிக்கலாம் என தெரிந்து கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் ‘தமிழ்கன்’ என்ற முகவரியுடன் இணையதள பக்கம் தொடங்கி, அதில் புதுப்படங்களை உடனுக்குடன் பதிவிட்டு விளம்பரம் பெற்று பணம் சம்பாதித்துள்ளார். இவருக்கும் புதுப்படங்களை திருட்டுத் தனமாக விற்பனை செய்யும் வேறு கும்பலுக்கும் தொடர்பு இல்லை. இதையே கவரி சங்கர் எங்களிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

கவுரி சங்கரை பிடித்து போலீஸார் விசாரிப்பதை கேள்விப்பட்டு அவரது பெற்றோர் சென்னை வந்தனர். அவர்கள் கவுரி சங்கரை கட்டிப்பிடித்து அழுதனர். இதனால் மனம் கலங்கிய கவுரி சங்கர், “இனி இதுபோல் செய்யமாட்டேன். தெரியாமல் செய்து விட்டேன் என்னை விட்டு விடுங்கள்” என்று போலீஸாரிடம் கதறி அழுதார்.