“கபாலி’ ரஜினி அறிமுக காட்சியை கசியவிட்டவர்களுக்கு நன்றி!” – தாணு

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.

உலகமெங்கும் நாளை (ஜூலை 22) இப்படம் வெளியாக இருக்கிறது. டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் முதல் வாரத்துக்கான விற்பனை முடிவுற்று இருக்கிறது. ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமலும், டிக்கெட் விலை அதிகமானதாலும் தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

இதனிடையே, அமெரிக்காவில் விநியோகஸ்தர்களுக்காக ‘கபாலி’ சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இதில் ரஜினி கலந்து கொண்டார்.

0a4f

இந்த நிலையில், கபாலி படத்தில் ரஜினி கதாபாத்திரம் அறிமுகக் காட்சி இணையத்தில் கசிந்தது. சமூக வலைத்தளம் மட்டுமன்றி வாட்ஸ் – அப்பிலும் இந்த இரண்டு நிமிடக் காட்சி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும், பல்வேறு தமிழ் திரையுலகினரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள்.

திருட்டு விசிடியை தடுப்பதற்காக டெல்லி வரை சென்று மனுக்கள் எல்லாம் அளித்தும், ‘கபாலி’ அறிமுக காட்சி இணையத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’ ரஜினி அறிமுகக் காட்சி கசிந்துள்ளது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கருத்து தெரிவித்துள்ளார். “தலைவர் அறிமுகக் காட்சியை போனிலோ, கம்ப்யூட்டரிலோ பார்த்தால் உங்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவம் ஏற்படாது. அந்தக் காட்சியை கசிய விட்டவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, படத்தை வெள்ளிக்கிழமை திரையரங்கில் காண்போம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தாணு கூறியுள்ளார்.