வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில்  தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்ட்தாக கூறப்படுகிறது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப். 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனுக்கு நெருங்கி உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட்தாம்.

கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர்.

வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் அதிகாரியின் அறிக்கை, வருமான வரித்துறை அறிக்கை, போலீஸார் வழக்குப் பதிவு உள்ளிட்ட அம்சங்களை வைத்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையின் முடிவில் தேர்தலை ரத்து செய்ய முடிவெடுத்து அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த நிலையில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிக்கு அதிகாரபூர்வமாக தகவல் அனுப்பியுள்ளது.

குடியாத்தம் (தனி), ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவித்தபடி ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.