ஆண்டிபட்டியில் அதிகாரிகள் – அமமுகவினர் மோதல்: போலீசார் துப்பாக்கி சூடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் லோகிராஜன், திமுக சார்பில் மகாராஜன், அமமுக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர்.

அமமுக கட்சி அலுவலகம் ஆண்டிபட்டி காவல்நிலையம் அருகே தனியார் வணிக வளாகத்தில் தரை தளத்தில் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக நேற்றிரவு தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக தேர்தல் அதிகாரிகள் போலீஸாருடன் அங்கு விரைந்தனர்.

அப்போது அமமுகவினர் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து ஓட்டம் பிடித்தனர். அதை தேர்தல் அதிகாரிகள் தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகளை சிலர் தாக்க முயன்றனர்.

இதையடுத்து போலீஸார் 4 ரவுண்ட் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது தப்ப முயன்ற அமமுகவினர் 4 பேரை போலீஸார் பிடித்தனர்.

பின்னர் அலுவலகத்தின் கதவைத் தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் வணிக வளாகத்தில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த தேனி எஸ்.பி பாஸ்கரன் விரைந்து சென்று பார்வையிட்டார். தொடர்ந்து 4 பேரிடம் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சம்பவம் ஆண்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அமமுக அலுவலகத்தில் இருந்து ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.