சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்த முஸ்லிம் இளைஞர்: சுஷ்மா ஸ்வராஜ் நெகிழ்ச்சி!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது

இத்தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், “சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருக்கிறேன். தற்போது எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பகவான் கிருஷ்ணர் ஆசீர்வதிப்பார்” என்று கூறியிருந்தார்

சுஷ்மாவின் இந்த ட்வீட்டை பார்த்த முஜிப் அன்சாரி என்பவர் இதற்கு அளித்த பதிலில், “நான் ஒரு முஸ்லிம். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவன். எனது சிறுநீரகத்தை நான் உங்களுக்கு தானமாக அளிக்க விரும்புகிறேன். காரணம், நீங்கள் என் தாயைப் போன்றவர் அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பாராக” என தெரிவித்தார்.

தனக்கு சிறுநீரகம் அளிக்க முன்வந்த முஜிப் அன்சாரியின் தியாக உணர்வு கண்டு மனம் நெகிழ்ந்த சுஷ்மா, “மிக்க நன்றி தம்பி. நான் உறுதியாக கூறுகிறேன். சிறுநீரகத்திற்கு மதம் கிடையாது” என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

முஜிப் அன்சாரியின் தியாக உணர்வும், சுஷ்மாவின் மதம் கடந்த மனிதநேய பதிலும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.