தமிழகத்தில் ஜூன் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் இல்லை!

மாநகராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூன் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என தெரிகிறது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட 12 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர, 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவி வகித்து வந்தனர். இவர்களின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி முடிவடைந்தது.

இதையடுத்து, புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 26-ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, அக்டோபர் 3-ம் தேதி முடிந்தது. அக்டோபர் 4-ம் தேதி மனுக்கள் பரிசீலனை தொடங்கியது.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தது. புதிய அறிவிக்கையை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தபோதும், தேர்தல் ரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. இதையடுத்து, தேர்தல் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

கடந்த அக்டோபர் 18-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், தேர்தல் ரத்து உத்தரவு நீடிக்கும் எனவும் அறிவித்தது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த நிலையில், தேர்தலும் தள்ளிப் போவதால் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அக்டோபர் 24-ம் தேதிக்குப் பின் உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் அவசர சட்டம் மூலம் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிசம்பர் 31-ம் தேதியுடன் தனி அதிகாரிகள் பதவிக்காலம் முடிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் வரை, தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே, தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறைகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,

Read previous post:
0a1e
நரேந்திர மோடி எனும் கூமுட்டை!

GNANABHARATHI CHINNASAMY: மோடியின் தொலைக்காட்சி பேச்சு ஒரு விஷயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டது. இனி அவரிடம் உருப்படியான யோசனை எதுவுமில்லை என்பது தான் அது. தகுதியில்லாத

Close