புலனாய்வு: ‘வேந்தர் மூவிஸ்’ மதனுக்கு அடைக்கலம் கொடுத்த 4 ரகசிய சினேகிதிகள்!

6 மாதங்கள் தலைமறைவாக இருந்த ‘வேந்தர் மூவிஸ்’ மதனை திருப்பூரில் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் மதனுக்கு 4 பெண்கள் அடைக்கலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு சில ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மதனுக்கு சில உதவிகளை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “”வேந்தர் மூவிஸ் மதன், உயிரோடு இருக்கும் தகவலை மட்டும் நீதிமன்றத்தில் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக தெரிவித்து வந்தோம். இந்த சமயத்தில் மதன், வடமாநிலத்தில் தலைமறைவாக இருக்கும் தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று மதனின் நடவடிக்கைகளை கண்காணித்தோம்.

பெரும்பாலும் மதன், எங்கு சென்றாலும் மாதக்கணக்கில் அவர் தங்கும் நிலை ஏற்பட்டால், வீட்டை லீசுக்கு எடுப்பார். இல்லையெனில் அந்த வீட்டை விலைக்கு வாங்குவார். இது அவரது ஸ்டைல். அதுபோலதான் உத்தரகாண்ட்டில் சரோஜ் ராகவத் என்பவரை நெட் மூலம் மதன் தரப்பு வீடு வாங்க தொடர்பு கொண்டுள்ளது.

தன்னுடைய பெயரில் தற்போது வீடு வாங்கினால் சிக்கிக் கொள்வோம் என்று கருதிய மதன், அவரது நெருங்கிய தோழியான, சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த ஜூலியட் (பெயர் மாற்றம்) பெயரில் வீடு வாங்கியுள்ளார். இதற்காக ஜூலியட் உத்தரகாண்ட் சென்றுள்ளார். அந்த வீட்டின் மதிப்பு 60 லட்சம் ரூபாய்.

வீடு வாங்கிய தகவல் எங்களுக்கு கிடைத்ததும், அந்த வீட்டை நாங்கள் சுற்றி வளைப்பதற்குள் மதன், அங்கிருந்து மாயமாகி விட்டார். இதனால் ஏமாற்றத்துடன் தனிப்படை போலீஸ் டீம் சென்னைக்கு திரும்பியது.

அடுத்து, மதனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் மூலமே அனைத்து பணம் மற்றும் உதவிகள் அவருக்கு கிடைத்துள்ளது என கண்டுபிடித்தோம். சேகர், கோவையில் இருக்கிறார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம்.

சேகரை அவரது செல்போன் நம்பர் மூலம் கண்டுபிடிக்க முயற்சித்தோம். அப்போது அந்த நம்பர், ஒரு பெண்ணின் பெயரில் இருந்ததால் சேகரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜூலியட்டைப் போல சென்னை போரூரைச் சேர்ந்த சுதாவும் (மாற்றம்) மதனுக்கு பல வகையில் உதவி செய்துள்ளார். இந்த சுதாவும் மதனுடன் வடமாநிலங்களில் சுற்றியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சுதாவின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து, அவர் தொடர்பு கொண்ட நம்பர்களை ஆராய்ந்தோம். ஆனால், அதில் எந்த தடயமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்போது, சுதாவின் போனை பறிமுதல் செய்து, வாட்ஸ் அப் காலை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்தோம்.

மதனுடன், சுதா வாட்ஸ்அப் காலில் பேசியது தெரியவந்தது. அந்த வாட்ஸ்அப் காலில் சேகருடன் பேசிய விவரம் கிடைத்தது. மேலும், மதன் ஒருமுறை பேசியவருடன் அடுத்தமுறை பேசுவது கிடையாது. இது எங்களது விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியது.

இதையடுத்து சேகர், சுதா ஆகியோரை ரகசியமாக கண்காணித்தோம். சேகர் மூலம் திருப்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த வர்ஷாவின் வீட்டில் மதன் தங்கி இருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் எங்களது சந்தேக வளையத்துக்குள் வர்ஷாவை கொண்டு வந்தோம்.

வர்ஷா, சினிமா நடிகை போல இருந்தார். மேலும் அவரது வீடும் பங்களா டைப் கொண்டது. பெரிய இடம் போல காணப்பட்ட வர்ஷாவிடம் எந்த ஆதாரங்களும் இல்லாமல் எப்படி விசாரிக்க முடியும் என்று முதலில் யோசித்தோம். இதற்காக வர்ஷாவின் வீட்டை ரகசியமாக சில நாட்களாக கண்காணித்தோம்.

வர்ஷாவுக்கும் மதனுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரித்தோம். அப்போது மதனின் மனைவி வழி உறவினர் வர்ஷா என்று தெரியவந்தது. இதனால் வர்ஷாவிடம் மதன் தொடர்பாக விசாரித்தபோது, எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை.

ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல்படி வர்ஷா வீட்டில் மதன், தலைமறைவாக இருப்பது உறுதியானது. இதையடுத்து வர்ஷாவின் வீட்டை சுற்றி வளைத்து தேடினோம். அப்போது ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை கைது செய்தோம்.

மதன், தங்கி இருந்த ரகசிய அறையில் ஏசி, டிவி, கழிவறை என அனைத்து வசதிகளும் இருந்தது. அந்த அறை அவருக்காகவே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற தகவலும் தெரிந்தது. வர்ஷாவின் வீடு இருப்பது கிராமம் என்பதால் எந்த சந்தேகமும் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கூட ஏற்படவில்லை.

இவ்வாறு மதனுக்கு உதவியவர்களில் பெரும்பாலானவர்கள் அவரது தோழிகள். சில ஆண் நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பட்டியலை தயாரித்துள்ளோம். விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மதனுக்கு உதவி செய்தவர்களின் பட்டியலில் அவரது தோழிகள் 4 பேர் உள்ளனர். மேலும் ஆண் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். பெண்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர், மதனை சேட்டா என்றுதான் அழைப்பார். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்த சமயத்தில் மதனுக்கு உதவி செய்ததில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. ஏனெனில் மதன் மூலம் அந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தில் மருத்துவ, இன்ஜினீயரிங் படிப்புக்கான சீட்களை பெற்றுள்ளனர். அந்த சீட்களை பெற்றதில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் மதனுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. அவர்களும் மதனுக்கு உதவியதால் அவர்களிடமும் விசாரிக்க போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்” என்றன போலீஸ் வட்டாரங்கள்.