பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் சங்கராகுப்தம் இவர் பிறந்த ஊர். இவருக்கு முரளி கிருஷ்ணா என்று தான் பெயர் சூட்டப்பட்டது. தனது 8-வது வயதிலேயே விஜயவாடாவில் தனது முதல் கச்சேரியில் பாடினார். அப்போது, ஹரிகதா புகழ் முசுநுரி சூரிய நாராயண மூர்த்தி பாகவதர் என்பவர், 8 வயது முரளி கிருஷ்ணாவின் முதல் கச்சேரியைக் கேட்டுவிட்டு, ‘பால’ என்ற அடைமொழியைச் சேர்த்தார். அன்று முதல் இவர் பாலமுரளி கிருஷ்ணா என்று அழைக்கப்பட்டார்.

திரிமுகி, பஞ்சமுகி, சப்தமுகி, நவமுகி ஆகியவற்றின் மூலம் தாள அமைப்பில் புதியன புகுத்தினார் பாலமுரளி கிருஷ்ணா.

பாடகர் என்பதுடன் வயலின், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் வாசிப்பார் பாலமுரளி.

தெலுங்குவில் பக்த பிரகலாதா திரைப்படத்தில் நாரதர் வேடமேற்றிருக்கிறார்.

’திருவிளையாடல்’ படத்தில் “ஒருநாள் போதுமா”, “தங்கரதம் வந்தது வீதியிலே”, ‘நூல்வேலி’ படத்தில் “மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே”, இளையராஜாவின் இசையில் “சின்னக் கண்ணன் அழைக்கிறான்” உள்ளிட்ட மறக்க முடியாத திரை இசைப்பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அள்ளி வழங்கியுள்ளார் பாலமுரளி.

400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1991-ம் ஆண்டு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி அரசு கவுரவித்தது. செவாலியே விருதுக்கும், இரண்டு தேசிய விருதுகளுக்கும் சொந்தக்காரர் பாலமுரளி.

சிலகாலம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சென்னையில் இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு பலதரப்பிலிருந்தும் இரங்கல் செய்திகள், புகழஞ்சலிகள் குவிந்து வருகின்றன.