“அனுமதி வழங்குவதில் முறைகேடு காரணமாக சிவகாசியில் கோர விபத்து!” – இரா.முத்தரசன்

சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது.

அப்போது, பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள், ஒரு ஜீப், பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டன.

அதுமட்டுமல்லாமல், அருகிலிருந்த ஸ்கேன் மையத்துக்கும் தீ பரவியது. அந்த ஸ்கேன் மையத்துக்குள் 25-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மூச்சுத் திணறலால் 4 பெண்கள், 5 ஆண்கள் உயிரிழந்ததாக தெரிகிறது.

இத்துயர சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சிவகாசியில் இன்று மாலை பட்டாசு கடையில் ஏற்பட்ட கோரமான விபத்து, அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதன் காரணமாக நடைபெற்றுள்ளது.

பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு உரிய விதிமுறைகள் பின்பற்றி இருந்தால் இவ்விபத்து நடைபெற்று இருந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிய வருகின்றது.

கடைவீதியில் அருகில் மருத்துவமனை போன்ற இடத்தில் பட்டாசு கடை இருந்த காரணத்தாலும், கடையில் அளவுக்கு மீறி பட்டாசுகள் இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்ட காரணத்தாலும் கோர விபத்து நடைபெற்று, மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க வந்த நோயாளிகள் உட்பட 9பேர் வெடி விபத்தில் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

கடைகளில் குறைந்த அளவே பட்டாசுகளை வைத்துக் கொள்வதும், விற்பனைக்கு தேவையான பட்டாசுகளை தனி இடத்தில் குடோனில் ஸ்டாக் வைத்துக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படாமல், பெருமளவிற்கு கடையில் ஸ்டாக் வைத்து, அங்கிருந்து வெளியிடங்களுக்கு பட்டாசுகளை அனுப்ப லாரியில் ஏற்றும்போது இவ்விபத்து நடந்துள்ளது.

பொதுமக்கள் அதிகஅளவில் நடமாடும் பகுதியில் பட்டாசுகடை வைக்க அனுமதியளித்தது மட்டுமின்றி, அளவிற்கு மீறி ஸ்டாக் வைக்க அனுமதித்த முறைகேட்டின் காரணமாகவே, விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகி உள்ளன.

விபத்திற்கு காரணமான கடைஉரிமையாளர், அனுமதியளித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இது போன்ற கோர சம்பவங்கள் இனி நடைபெறா வண்ணம், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், உயிர் இழந்தவர் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றுவதுடன், அவர்களின் பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயும் தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.