ஹெல்மெட் அணியாத போலீசாரை தண்டிக்க ஒரே வழி…!

சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்களில் 90 சதவிகிதத்தினர், போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு, ஹெல்மெட் அணிந்துதான் போய் வருகிறார்கள். மீதமுள்ள 10 சதவிகிதத்தினர் தான் ஹெல்மெட் அணியாமல் திரிகிறார்கள். அந்த 10 சதவிகிதத்தினர் யார் என்று பார்த்தால், அவர்களில் பெரும்பாலோர் போலீசாராகவே இருக்கிறார்கள். (பார்க்க – மேலே உள்ள படம்)

சாமானியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் அவர்களை பயங்கரவாதிகள் போல், பயங்கர கொள்ளைக்காரர்கள் போல் பாவித்து, போக்குவரத்து போலீசார் துரத்திச் சென்று பிடித்து இழுத்துவந்து இம்சிக்கிறார்கள். ஆனால், போக்குவரத்து போலீசாரே ஹெல்மெட் இல்லாமல் தெனாவட்டாக திரிகிறார்களே… அவர்களுக்கு இந்த விதி பொருந்தாதா? ஹெல்மெட் அணிவது அவர்களுக்கு கட்டாயம் இல்லையா?

இக்கேள்விக்கு பதிலளித்துள்ள சென்னை போக்குவரத்து இணை ஆணையர் கே.பவானீஸ்வரி, “போக்குவரத்து போலீஸாரே ஹெல்மெட் அணியாமல் விதிகளை மீறுவதாகக் கூறுகிறீர்கள். பொதுமக்களுக்கு என்ன சட்டதிட்டமோ அதேதான் போக்குவரத்து போலீஸாருக்கும். விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

போலீசார் மீது போலீசாரே நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொல்வதை நம்புவதற்கு மிஸ்டர் மகாஜனம் ஒன்றும் முட்டாள் இல்லை. அத்தகைய போலீசாரை பொதுமக்கள் தான் அம்பலப்படுத்தி தண்டிக்க வேண்டும்.

எப்படி?

உங்கள் கையில் காமிரா மொபைல் இருக்கிறது. உங்களுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட் இருக்கிறது. பிறகென்ன…! எந்நேரமும் செல்ஃபி எடுத்துக்கொண்டு சுயமோகியாய் திரியாமல், கொஞ்சம் சமூக அக்கறையுடன் அயோக்கிய போலீசார் பக்கம் உங்கள் கேமராவை திருப்புங்கள்! படத்தை பதிவேற்றம் செய்யுங்கள்!