அமரர் நா.முத்துக்குமார் கேடயத்தை மகன் பெற்றுக்கொண்டார்: ‘தேவி’ வெற்றி விழாவில் உருக்கம்!

பிரபுதேவா – தமன்னா நடிப்பில், விஜய் இயக்கத்தில், பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியான ‘தேவி’ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் திரையுலக பிரபலங்களான பிரபு, நாசர், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், விஷால், கார்த்தி, ஜீவா, விக்ரம் பிரபு, பரத், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கிரிஷ், வருண், லட்சுமண், லிஸ்ஸி, மீனா, சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

‘தேவி’ படத்தில் பங்கு பெற்ற நடிகர் – நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு படத்தின் நாயகன் பிரபுதேவா, நாயகி தமன்னா, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் கே.கணேஷ் ஆகியோர் கேடயங்கள் வழங்கி கௌரவித்தனர்.

இப்படத்துக்கு பாடல்கள் எழுதியவரும் சமீபத்தில் மரணத்தைத் தழுவிக் கொண்டவருமான அமரர் நா.முத்துக்குமார் சார்பில் அவரது கேடயத்தை அவரது மகன் மாஸ்டர் ஆதவன் பெற்றுக்கொண்டார். அப்போது விழாவுக்கு வந்திருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று  உருக்கமாக கைதட்டி கௌரவித்தது கண்களில் நீரை வரவழைப்பதாக இருந்தது.