“என் கலை வாழ்வு நீள வேண்டும்”: கமல் பிறந்தநாள் விருப்பம்!

நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று (நவம்பர் 7ஆம் தேதி) பிறந்த நாள். 1954ஆம் வருடம் பிறந்த கமல்ஹாசனுக்கு நேற்றுடன் 62 வயது பூர்த்தியாகியுள்ளது.

இதனையொட்டி, கமல்ஹாசனுக்கு நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களிலும், தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், “நடிப்புலகின் சகாப்தமாகவும், சிறந்த மனிதராகவும் இருக்கும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகை சுருதிஹாசன், ‘எனது டார்லிங் டாடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார்.

நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “மிகச் சிறந்த நடிகரும் கொடைத்தன்மை உள்ளவருமான எனது சூப்பர் டூப்பர் நண்பர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்றும் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் தொலைபேசி மூலம் வாழ்த்து கூறினர். மேலும், ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில், “நடிகர் திலகம் இல்லாத குறையை இன்றைய தலைமுறைக்கு போக்கியவர்”, “தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய கலை உலகின் ஞானி” என்றெல்லாம் கருத்துகள் பதிவு செய்து வாழ்த்தியிருந்தனர்.

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், “அன்பு ரசிகர்கட்கும், மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்கட்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்” என்று கமல் கூறியுள்ளார்.