என்டிடிவி விவகாரம்: மக்கள் கொந்தளிப்பால் அசிங்கப்பட்டு நிற்கிறது மோடி அரசு!

என்டிடிவி தொலைக்காட்சி சானல் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடை விதிக்க மைய அரசு திட்டமிட்டபோது, அது மக்களிடையே இவ்வளவு பெரிய கொந்தளிப்பையும் ஊடகங்களின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரும் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை. தடை ஆணை நவம்பர் 3ஆம் தேதி – வியாழக்கிழமை வழங்கப்பட்டது. சனிக்கிழமையே தான் தோல்வி காண்கிறோம் என்பதை உணரத் துவங்கி விட்டது.

கிடைத்த தகவல்களின் படி —
என்டிடிவியின் சீனியர் எடிட்டரைத் தொடர்பு கொண்டு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு உயர் அதிகாரி ஒருவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த அதிகாரி தொடர்பு கொண்டபோது, சமரசத்துக்கு தயாராக இல்லை என்றும், உச்சநீதிமன்றத்தை அணுக ஏற்பாடு செய்வதாகவும் என்டிடிவி அவருக்குத் தெரிவித்தது. “எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருப்போம்” என்று என்டிடிவி வாக்குறுதி அளித்தால், தடை விலக்கப்படும் என்று அந்த அதிகாரி சூசகமாகத் தெரிவித்தார். ஆனால், என்டிடிவி எடுத்திருந்த உறுதியான நிலைபாட்டைக் கண்டு அவரே அதிர்ந்து போனார். என்டிடிவி சமரசத்துக்குத் தயாராக இல்லை என்று அமைச்சருக்குத் தகவல் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை அரசு பீதியடைந்த நிலையில் இருந்தது. வலதுசாரி ஆதரவு வலைதளங்கள் உள்பட ஊடகங்கள் அனைத்தும் என்டிடிவிக்கு ஆதரவாக இருந்தன, கருத்துக்கணிப்புகள் நடத்தின. இதெல்லாம் என்டிடிவிக்கு மக்களிடையே பெருமளவு அனுதாபம் இருப்பதைக் காட்டியது. என்டிடிவி இண்டியா சானலின் நிகழ்ச்சி வழங்குநர் ரவிஷ் குமார், தன் எதிர்ப்பை வெளிப்படுத்த ஊமைக்கலையைப் பயன்படுத்தி வழங்கிய நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. அதே சமயத்தில், காணாமல் போன தன் மகனுக்காக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தாயை தில்லி போலீஸ் இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் தேசிய ஊடகங்களில் தொடர்ந்து வெளியாயின.

பிரச்சினையை முடித்துவிட அரசு விரும்புகிறது என்று தெரிவிக்க என்டிடிவிக்கு மீண்டும் சமாதானத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். பிரணாய் ராய் வெங்கையா நாயுடுவை சந்திக்கத் தயார் என்ற செய்தி கிடைத்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டது அரசு. இதற்கிடையில், என்டிடிவி உச்சநீதிமன்றத்தில் வழக்காட நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்துவிட்ட தகவலும் அரசுக்குத் தெரிந்தது. மற்ற எல்லா தொலைக்காட்சிகளையும் விட்டுவிட்டு என்டிடிவி மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நீதிமன்றத்தில் உறுதியாக நிறுவ முடியும், தடை சட்டபூர்வமாக செல்லாது என்று இந்தப் பிரச்சினையுடன் தொடர்புடைய வழக்கறிஞர்கள் கூறினர்.

என்டிடிவி பங்குச் சந்தையில் பதிவுபெற்ற நிறுவனம் என்பதால், இந்தி சானலுக்கு எதிரான தடையை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்ல இருப்பதாக என்டிடிவி திங்கள்கிழமை காலையில் பங்குச்சந்தைக்குத் தெரிவித்தது. பிரணாய் ராய் மற்றும் சீனியர் எடிட்டர்கள் கொண்ட குழு ஒன்று அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்திக்க ஒப்புக்கொண்டனர். அந்த சந்திப்பு நடைபெறுவதற்கு சற்று முன்னதாக, அமைச்சர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் இதுவரை இல்லாத வகையில் வியப்பளிக்கும் ஒரு தகவலைச் சொன்னார் அமைச்சர்: “தடை ஏதும் விதிக்கப்படவில்லை. நாங்கள் ஓர் அறிவுறுத்தல் குறிப்பை அனுப்பியிருக்கிறோம். அதனை தொலைக்காட்சி சானல் பின்பற்றுகிறதா என்று பார்ப்போம்.”

என்டிடிவி எடுத்த உறுதியான நிலைப்பாடு அமைச்சகத்தை அதிர்ச்சி அடையச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. என்டிடிவி சானல் இறங்கி வரும் என்று எதிர்பார்த்திருக்கிறது அமைச்சகம். நடந்ததோ முற்றிலும் வேறு. என்டிடிவி தவறேதும் செய்யவில்லை, எனவே தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் ஏதும் விடுக்க முடியாது என்பதில் பிரணாய் ராய் உறுதியாக இருந்தார். ஏதோ தவறான புரிதல் ஏற்பட்டு விட்டது என்றும், விஷயத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் அமைச்சர் ஒப்புக்கொண்டதாக நம்பப்படுகிறது.

தடையை நிறுத்தி வைக்குமாறு அதிகாரபூர்வமான வேண்டுகோள் கொடுங்கள் என்று என்டிடிவிக்கு அமைச்சகம் வேண்டியது. தொடர் பேச்சுவார்த்தைகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனைகளுக்குப் பிறகு, கடிதம் கொடுக்க என்டிடிவி ஒப்புக்கொண்டது – ஆனால், அந்தக் கடிதம் தரப்படும் அதே வேளையில் ஒருநாள் தடையை விலக்கிக் கொள்வதற்கான அரசின் கடிதமும் தரப்பட வேணடும் என்று நிபந்தனை விதித்தது. எல்லா அதிகாரிகளும் அலுவலக நேரம் முடிந்து போய் விட்டார்கள் என்பதால், அரசின் தடை விலக்கல் கடிதம் காலையில் தரப்படும் என்று கூறியது அமைச்சகம். அமைச்சகத்தின் கடிதம் தருவதற்குத் தயாராகாத வரையில், வேண்டுகோள் கடிதமும் தர முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டது என்டிடிவி.

இறுதியில் அரசு இறங்கி வந்தது. என்டிடிவியின் கடிதத்திலேயே குறிப்பெழுதிக் கையெழுத்திட்டார் அமைச்சர். ஆனால் இதையும் ஏற்க மறுத்துவிட்டது என்டிடிவி. இறுதியில், அதிகாரபூர்வமான தடைவிலக்கல் கடிதம் ஒரு மணி நேரத்தில் அதிகாரிகளால் தரப்பட்டது.

அரசு அசிங்கப்பட்டு நிற்கிறது. என்டிடிவி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றி அதற்கு மட்டும் உரியதல்ல, ஊடக சுதந்திரத்திற்கான வெற்றி. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, “அரசின் ஜனநாயக மாண்புகளுக்கேற்ப தடை விலக்கப்பட்டது” என்று ட்வீட்டரில் சமாளிக்க முயன்றார் வெங்கையா நாயுடு. ஆனால் அதற்கு முன்பே ஆட்டம் முடிந்து விட்டது. என்டிடிவிக்கு கிடைத்த வெற்றி சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டது. வலதுசாரிகள் பொருமினார்கள், முதுகெலும்பு இல்லாதவர் என்று வெங்கையா நாயுடுவைத் திட்டினார்கள்.

இதுவே சில மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தால் என்டிடிவி மீதான நடவடிக்கை கவனத்தைப் பெற்றிருக்காது. ஊடகங்கள் அரசை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்காது. திட்டமிட்டு இயங்கும் வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் என்டிடிவிக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்திருப்பார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு. துல்லியத் தாக்குதல், ஆயுதங்களின் சலசலப்பு, தேசியவாதம் போன்றவை உணர்வுரீதியாக மக்களை ஈர்க்கக்கூடும். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, தொழில்துறை முரண்கள், வர்த்தகச் சரிவு போன்றவை நிலவும் சூழலில் அரசின் பக்கம் மக்களைத் திரட்டுவது மிகவும் கடினம்.

இதழியலாளருக்கு எது தெரிகிறதோ இல்லையோ, காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்று தெரியும். இதுதான் தேசிய ஊடகங்களையும் முன்னணிப் பத்திரிகையாளர்களையும் என்டிடிவிக்கு ஆதரவாக ஒன்றுபடச் செய்த்து. இது ஊடக சுதந்திரத்துக்கான உறுதி என்பதைவிட, அரசியலின் போக்கு மாறிக்கொண்டிருக்கிறது என்ற புரிதலும்கூட.

ஐந்தாண்டுகளுக்கு முன் மகாராஷ்டிரத்தின் முதியவர் ஒருவரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி இளைஞர் ஒருவரும் தில்லியின் ஜந்தர் மந்தரில் லோக்பால் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது யுபிஏ அரசுக்கு நிகழ்ந்ததும் இதுவே. அப்புறம் நடந்ததெல்லாம் எல்லாருக்கும் தெரியும்தானே?!

எழுதியவர்: அமித் சென்

தமிழாக்கம்: ஷாஜஹான்.ஆர்