“ரூ.500, ரூ.1000 செல்லாது” அறிவிப்புக்கு பின் ரஜினி – கமல் சந்திப்பு: ஒன்றரை மணி நேரம் ஆலோசனை!

நீண்ட நாட்கள் நேரில் சந்திக்காமல், தொலைபேசி மூலம் மட்டுமே பேசி வந்த நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், “ரூ.500, ரூ.1000 செல்லாது” என நரேந்திர மோடி அறிவித்தபின், நேரில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

கடந்த ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசன் மாடியிலிருந்து விழுந்து, காலில் பலத்த அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர் டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோதோ, வீட்டில் ஓய்வெடுத்தபோதோ, அவரை ரஜினி நேரில் சந்திக்கவில்லை. தொலைபேசி மூலம் தான் நலம் விசாரித்தார்.

கமலுக்கு ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டவுடன், திரையுலக பிரபலங்கள் சிலர் கமலை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார்கள். அப்போதுகூட ரஜினி – கமல் சந்திப்பு நிகழவில்லை. ட்விட்டர் மற்றும் தொலைபேசியில் தான் கமலுக்கு வாழ்த்து சொன்னார் ரஜினி.

மருத்துவ சிகிச்சைக்காக ரஜினி 2 முறை அமெரிக்காவுக்கு சென்று வந்தபோது, அக்டோபர் கடைசி வாரத்தில் கமலைவிட்டு பிரிவதாக கௌதமி அறிவித்தபோது, நவம்பர் 7ஆம் தேதி கமல் பிறந்தநாள் வந்தபோது… என சகல முக்கிய சந்தர்ப்பங்களிலும் ரஜினியும், கமலும் தொலைபேசியில் தான் பேசிக்கொண்டார்களே தவிர, நேரில் சந்திக்கவில்லை.

இந்நிலையில், கமல் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் (நவம்பர் 8ஆம் தேதி) “ரூ.500, ரூ.1000 செல்லாது” என திடீரென்று அறிவித்தார் நரேந்திர மோடி. கையிலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என தெரியாமல் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதுவரை தொலைபேசியில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த ரஜினியும், கமலும், தொலைபேசியில் பேசக் கூடாத ஏதோ ஒரு விஷ்யம் பற்றி பேசுவதற்காக நேரில் சந்தித்தார்கள்.

“கமல் பிறந்த நாளுக்குப் பிறகு, ரஜினி – கமல் சந்திப்பு சென்னையிலுள்ள ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போதும் கமல் அலுவலகத்தில் நெருங்கிய ஊழியர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள்…. இச்சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீண்டது… சில மணித்துளிகள் வெளியே இருந்து பேசியவர்கள், அதற்குப் பிறகு கமலின் அறையில் தனியாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்…” என்கிறது tamil.thehindu.com செய்தி.

“இது வழக்கமான சந்திப்பு தான். இதற்கும் ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை” என ரஜினி, கமல் இருவரது தரப்பும் கூறினாலும், “அதுவரை தொலைபேசி மூலம் மட்டுமே பேசி வந்த இவர்கள், தொலைபேசியில் பேச முடியாத எந்த விஷயம் பற்றி நேரில் சந்தித்து பேசியிருப்பார்கள்?” என்ற கேள்விக்கு தான் விடை கிடைக்கவே இல்லை!