தமிழ்நாட்டு அரசியல் கதை!

ஒரு ஊரில் ஒரு பீரோவும் ஒரு கட்டுமரமும் இருந்தன. எத்தனை வருடங்களாக என்று தெரியவில்லை. பல காலமாக இருக்கிறது.

அந்த ஊர் தாழ்வான பகுதியில் இருப்பதால் சுற்றி இருக்கும் ஆறு அடிக்கடி கரை ஏறும். அந்த ஊர் மக்களுக்கு ஒரு நிமித்தம் உண்டு. அங்கிருந்து வேறு பகுதிக்கு பெயரவோ தனியே செல்லவோ முயன்றாலும் அந்த ஆறு பாய்ந்து அவர்களை அழித்து விடும். வாழ்ந்தாலும் செத்தாலும் அவர்களுக்கு அந்த ஆற்றங்கரைதான்.

முன்பு எப்போதோ ஒன்றிரண்டு மூத்த கிழங்கள் வெள்ளகால பிரச்சினை எல்லாம் முன் யோசித்து எங்கு இருந்தோ சிவப்பு பீரோவையும் கறுப்பு கட்டுமரத்தையும் ஊருக்கு கொண்டு வந்து போட்டிருந்தனர். பீரோ என்றால் மொத்த ஊரின் தேவைக்கும் பயன்படும் பெரிய அளவு பீரோ. கட்டுமரம் ஊர் மக்கள் எல்லாரையும் சுமக்கும் அளவுக்கு பெரிய கட்டுமரம்.

ஆறு கரை தாண்டும் போதெல்லாம் மக்கள் தங்கள் உடைமைகளை காத்து கொள்ள பீரோவையும் உயிரை காப்பாற்றி கொள்ள கட்டுமரத்தையும் பயன்படுத்தி கொண்டனர்.

பல ஆண்டுகள் பயன்பட்டதாலும் ஆற்றின் கரையேறும் மமதையாலும் கட்டையாலான பீரோவும் கட்டுமரமும் உளுத்து போய் கொண்டிருந்தன.

காட்டாறும், ஊரின் ஆறுடன் சமீப காலமாக, லாபம் கருதி கலக்க ஆரம்பித்ததால், ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகமாகி கொண்டே இருந்தது. அடிக்கடி வெள்ளம் வந்தது. உளுத்து போயிருந்தாலும் சுயமரியாதையையும் பொது நலத்தையும் கற்று கொடுத்திருந்த கட்டுமரத்தையும் பீரோவையும் மட்டுமே மக்கள் அதிகம் சார்ந்திருந்தனர்.

என்றும் இல்லாத காலமாக இப்போது திடீரென பீரோவுக்கும் கட்டுமரத்துக்கும் சண்டை வந்துவிட்டது. யார் பெரியவன் என்ற சண்டை. தேவையில்லாத சண்டைதான். ஏனெனில் இரண்டும் சண்டை போடும் நேரம், ஆற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது. கரை உடைந்துவிட்டால் அவ்வளவுதான். இந்த முறை மொத்த ஊரையும் சுருட்டி விடும்.

வெள்ளத்துக்கு முன்னெச்சரிக்கையாக பீரோவையும் கட்டுமரத்தையும் பயன்படுத்த முடியுமா என்ற குழப்பத்தில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

ஆற்றின் தந்திரத்தால் உளுத்து போய் கொண்டிருக்கிறோம் என்ற உண்மை உணராது, காலம் கருதி தம் பொறுப்பு புரியாது, கட்டுமரமும் பீரோவும் வெட்டி பழம்பெருமையை பேசி சண்டையிட்டு கொண்டிருந்தன.

கரை தொடும் உயரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆறு, சண்டையை கண்டு கருங்காலி புன்னகையுடன், இன்னும் வேகம் அடைந்து கொண்டிருந்தது.

RAJASANGEETHAN JOHN

 

Read previous post:
k1
‘நாயுடன் நடித்ததை விட மீனுடன் நடித்தது பெரிய சவாலாக இருந்தது!” – சிபிராஜ்

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) திரைக்கு

Close