“ரஜினி சார்… மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?”: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்

இன்று (03-06-2018) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:-

கேள்வி: நீங்கள் குறிப்பா யாரிடமாவது கேட்க விரும்புகிற கேள்விகள் உண்டா?

பிரகாஷ்ராஜ்: அடடா… ஒண்ணா, ரெண்டா… நிறைய இருக்குங்க. வரிசையா கேட்கிறேன். இதை எல்லாம் என் கேள்விங்கிறதைவிட மக்களோட கேள்வின்னு சொல்லலாம்.

தூத்துக்குடியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டவங்களுக்கு பிரதமர் மோடி ஏன் இரங்கல்கூட தெரிவிக்கல? ஏன், தமிழர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா… இல்ல, அவர் தமிழர்களுக்குப் பிரதமர் இல்லையா? இனிமே இந்தியாவோட தேசிய விலங்கு புலியா, பசுவா? சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு பல மாதங்கள் ஆகியும், சசிகலா முதல்வராக முயலும்போது தீர்ப்பு வெளியானது ஏன்? மாண்புமிகு பிரதமர் அவர்களே, இதுக்கெல்லாம் பதில் சொல்வீங்களா?

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இறந்த சரியான தேதி எது? தமிழக ஆட்சியாளர்களுக்கு இது ஒரு கேள்வி போதும்னு நினைக்கிறேன். அதுக்கே அவங்க மேலிடத்தில் கேட்டுதான் பதில் சொல்லணும்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சார்கிட்ட கேட்கிறேன்… மாநிலத்தில் ‘சிஸ்டம் சரியில்லை’னு கொதிச்சிப்போய் அரசியலுக்கு வந்திருக்கிற நீங்க, தமிழ்நாட்டுல பினாமி அரசாங்கம் நடத்துற பாஜக-வை ஏன் ஒரு வார்த்தைகூட கண்டிக்கலை? மாநிலத்துல சிஸ்டம் கெட்டுப்போயிருச்சினா, மத்தியில் சரியா இருக்கா?

வணக்கம், ‘உலக நாயகன்’ கமல் சார்.. இது உங்களுக்கு… பலவீனமான மாநில அரசை சாட்டையை எடுத்து விளாசுறீங்க. ஆனா, மத்திய அரசு பத்தி மட்டும் ரொம்ப மென்மையா விமர்சனம் செய்றீங்க… ஏங்க?

இப்படி நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டுல கேள்வி கேட்டா வாயிலே சுடுவோம்னு இப்ப பதில் சொல்லி இருக்கு தமிழக அரசு. இருக்கு… அதுக்கும் இருக்கு, துப்பாக்கிக் குண்டுகளைவிட மக்களோட கேள்விகளுக்கு சக்தி அதிகம்னு புரிய ரொம்ப நாள் ஆகாது!

கேள்வி: மற்ற கட்சிகளைவிட பாஜக-வை அதிகமாக விமர்சனம் செய்வது ஏன்?

பிரகாஷ்ராஜ்: மற்ற கட்சிகளைவிட மதவாதத்தை வைத்து ஆட்சி செய்கிற பாஜக மிகவும் ஆபத்தானது. அதனால்தான் அதை அதிகமா எதிர்க்க வேண்டியிருக்கு. ஒரு சிறந்த பத்திரிகைக்காரன் எப்பவுமே எதிர்க்கட்சியாதான் இருக்கணும்னு லங்கேஷ் சொல்வாரு. இளைஞனா இருக்கும்போது ஆழமா மனசுல பதிஞ்ச விஷயம் இது. எந்தக் கட்சி தப்பு பண்ணாலும் ஒரு குடிமகனா நிச்சயம் எதிர்ப்பேன்.

கேள்வி: தூத்துக்குடி போராட்டம், சமூக விரோதிகளால் வன்முறையானது என்று நடிகர் ரஜினி ஆவேசமாகச் சொல்லியிருக்கிறாரே?

பிரகாஷ்ராஜ்: பாஜக தலைவர்களின் குரல் என்னவோ, அதையே ரஜினிகாந்த் பிரதிபலிக்கிறார். ஆகாதவர்களை தேச விரோதி, சமூக விரோதி என்று முத்திரை குத்துவது ஆபத்தானது. கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். 100 நாட்கள் மக்கள் அற வழியில் போராடும்போது, ரஜினி என்ன செய்துகொண்டிருந்தார்? மக்களோடு மக்களாக நின்று அற வழியில் போராட்டத்தை நடத்த வேண்டியதுதானே? அவரை யார் தடுத்தார்கள்? நீண்டகாலமாக நடக்கும் மக்களின் நியாயமான போராட்டத்தைக் கண்டுகொள்ளாத அரசுகளும், அதை அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களும்தான் என் பார்வையில் சமூக விரோதிகள்.

த.செ.ஞானவேல்

நன்றி: தி இந்து தமிழ் நாளிதழ்