“மக்களை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அமல் செய்யக் கூடாது”: தமிழ் திரையுலகினர் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று (8ஆம் தேதி) காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடங்கிய மவுன போராட்டம் நண்பகல் 1 மணிக்கு முடிவடைந்தது.

போராட்டத்தின் நிறைவாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வாசித்த தீர்மானங்களின் விவரம் வருமாறு:

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு விஷயத்தையும் அரசாங்கம் அமல்படுத்தக் கூடாது.

காவிரி நீர் உற்பத்தியாகும் இடங்களையும், அது சேருகின்ற இடங்களையும் இயற்கை தீர்மானிக்கிறது. அதை சார்ந்திருக்கின்ற மக்கள் இரு மாநிலங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுடைய விவசாயம் மற்றும் குடிநீர் சார்ந்த வாழ்வாதாரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டுமென்று நாங்கள் கோருகிறோம்.

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கக்கூடிய காவிரி நீர் பிரச்சினை, தமிழக மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அரசியலற்றப் பொதுநோக்குடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 25 வருடங்களாகப் பல அரசாங்கங்களால் கையாளப்பட்டு வருகிறது ஸ்டெர்லைட் பிரச்சினை. இப்போது ஸ்டெர்லைட் நிர்வாகம் அந்த ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கவும், மேலும் விரிவாக்கவும் அனுமதி கோரி நிற்கிறது. இந்த நேரத்தில் அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்களால் பல்வேறு வகையில் அப்பகுதி மக்களும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாகத் தமிழக அரசும் திரைத்துறை சார்ந்த நாங்களும் போராடி வருகிறோம். மத்திய அரசு இதற்கு செவிசாய்த்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென வலியுறுத்துகி றோம்.

மேலும், இவ்வளவு காலம் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால், மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப் பட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை தமிழக திரைத்துறை சார்பாக வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.