எண்ணூர் சீரழிவுகளால் வடசென்னைக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சென்னைக்கும் ஆபத்து!

கொசஸ்தலை ஆற்றின் ஆக்கிரமிப்புகளால் வட சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். நேற்று காலை அந்தப் பகுதிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். அவர் சொல்வது போல கொசஸ்தலை ஆற்றின் சீர்கேடுகளால் மூழ்குவது வட சென்னை மட்டுமல்ல… தென் சென்னைக்கும் அந்த ஆபத்து இருக்கிறது என்பதுதான் உண்மை.

கொசஸ்தலை: நதி மூலம் என்ன?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், சோளிங்கர் மலை அடிவாரமான கிருஷ்ணாபுரம், நகரி பகுதிகளில், சோளிங்கர் மலையில் இருந்து மழைக் காலங்களில் வெள்ளம் வெளியேறும். காவேரிப்பாக்கம் ஏரி வழியாக பாலாற்றின் உபரி நீரும் வெளியேறும். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் கொசஸ்தலை ஆறு. இதன் உபரி நீர், கேசவரம் அணைக்கட்டுக்குச் செல்லும்போது உருவாவது தான் கூவம் ஆறு. கொசஸ்தலை ஆறு கிருஷ்ணாபுரம் – காவேரிப்பாக்கம் ஏரி வழியாக எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. முகத்துவார அகலம் 120 மீட்டர். கொசஸ்தலையின் நீர்ப் பிடிப்பு பகுதி 3,757 சதுர கி.மீ. மொத்த நீளம் 136 கி.மீ. சென்னைக்குள் மட்டும் 16 கி.மீ. ஓடுகிறது. ஆற்றுப்படுகையின் அகலம் 150 – 250 மீட்டர். ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு வினாடிக்கு 1,25,000 கன அடி தண்ணீர். சராசரி கொள்ளளவு 1,10,000 கன அடி.

வெள்ளம் எப்படி வெளியேறும்?

இதில் வெள்ளம் வந்தால் வெளியேறுவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதுதான் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய். இது எண்ணூரில் தொடங்கி கூவம் ஆற்றின் பேசின் பாலம் – சென்ட்ரல் – சிந்தா திரிப்பேட்டை – நேப்பியர் பாலம் வழியாக கூவம் வடக்குப் பகுதி வரை 58 கி.மீ. நீளம் கொண்டது. இதன் அதிகபட்ச கொள்ளளவு வினாடிக்கு 10,500 கன அடி. வெள்ளக் காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் இதன் வழியாக ஓடி, கூவத்தில் கலக்கிறது. அடுத்ததாக, இங்கிருந்து வெளியேறும் வெள்ள உபரி நீர் ஓட்டேரி அருகில் தொடங்கும் மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் (7.2 கி.மீ.) வழியாக ஓடி, மயிலாப்பூர் – காந்தி நகர் – மத்திய கைலாஷ் அருகில் அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு வினாடிக்கு 1,500 கன அடி. அடையாறு வெள்ளத்தின் உபரி நீர் அடையாறு ஆற்றில் கிண்டி அருகே தொடங்கி தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக 108 கி.மீ. ஓடி, மரக்காணம் ஆலம்பரா கோட்டை அருகே உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. இதன் கொள்ளளவு வினாடிக்கு 6,000 கன அடி.

கொசஸ்தலை ஆற்றில் கடந்த 2005, 2015 ஆண்டுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இருமுறையும் ஆற்றில் 90,000 கன அடி அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது.

வட சென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கொசஸ்தலை ஆற்றின் வழித் தடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால், புழுதிவாக்கம், அத்திப்பட்டு, புதுநகர் பகுதிகளில் ஆற்று நீர் ஊடுருவுகிறது. சிறு மழைக்கே இங்கெல்லாம் முழங்கால் அளவு தண்ணீரில் நடக்கிறார்கள் மக்கள். மாலை நேரம் ஆகிவிட்டால் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு கொசுக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றன. வெள்ளக் காலங்களில் மொத்த வீடுகளும் தண்ணீரில் மூழ்கிவிடுகின்றன.

அனல் மின் நிலையங்களின் சாம்பல் ஆற்றிலும், முகத்துவாரம் வழியாக கடலிலும் கொட்டப்படுவதால் சுமார் 11 ஆயிரம் டன் மீன்கள் கிடைத்த பகுதியில் தற்போது 7 ஆயிரம் டன் மட்டுமே கிடைக்கின்றன. 20 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது காமராஜர் துறைமுகம் பகுதி மூன்றாம் பெரும் திட்டப்பணி கள் புழுதிவாக்கம் – கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் நடக்கிறது. சாலைகள் அமைக்கப்பட்டு பெரும் கட்டிடங்கள், நிலக்கரி குடோன்கள், கன்டெய்னர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் என சுமார் 1,090 ஏக்கரில் பணிகள் தொடங்கியிருக்கின்றன. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாத நிலையில், மாநில கடலோர மேலாண்மை ஆணையத்தின் அனுமதியுடன் பணிகள் நடக்கின்றன. கடலோர ஒழுங்கமைப்பு மண்டல விதிமுறைகளின்படி கடலோரத்தில் 500 மீட்டர் தொலைவு வரை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்கிற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது.

துறைமுக விரிவாக்கத்துக்காக தளம் அமைக்கும் பணிகளும் முகத் துவாரத்திலேயே நடக்கின்றன. தவிர, சர்வதேச முக்கியத்துவம் பெற்ற மற்றும் கடற்கரை ஒழுங்கு அறிவிக்கை – 1991 பிரிவு 1-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணூர் முகத்துவாரத்தில் இதுபோன்ற பணிகள் நடப்பது அப்பட்டமான அத்துமீறல். இதுபோன்ற சூழலில் புயல், பெருமழை வரும்போது மொத்த வெள்ளமும் எண்ணூர், திருவள்ளூர், திருவாலங்காடு, எல்லாபுரம், திருக்கண்டலம் தொடங்கி வடசென்னை முழுவதையும் மூழ்கடிக்கும்.

வட சென்னை மட்டுமல்ல; எண்ணூரில் பொங்கும் வெள்ள நீர் வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக சென்ட்ரல், சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றை நிரப்பி அண்ணா சாலை, திருவல்லிக்கேணி வரை பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னொரு பக்கம் கூவத்தில் பொங்கும் வெள்ள நீர் ஓட்டேரி வழியாக மத்திய பக்கிங்ஹாம் கால்வாயை நிறைத்து மயிலாப்பூர், மத்திய கைலாஷ் பகுதி வரை கடும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தும். அடுத்தது அடையாறு. இதுவும் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருப்பதால் இதன் பாதிப்பு கிழக்கு கடற்கரைச் சாலை வரை நீளும். கிட்டத்தட்ட மொத்த சென்னையும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும்.

கொசஸ்தலை மட்டுமில்லாமல் பக்கிங்ஹாம் கால்வாய்கள், ஓட்டேரிநல்லா, வீராங்கல் ஓடை உட்பட 9 முக்கிய கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்துக்கு இதுவும் முக்கியக் காரணம். தவிர, கொசஸ்தலை, கூவம், அடையாறு முகத்துவாரங்களைப் பொறுத்தவரை, அடையாறு முகத்துவாரத்தில் மட்டுமே ஓரளவு தூர் வாரும் பணி நடந்தது. மற்றவை ஆக்கிரமிப்புகளாலும் மணல் மேடுகளாலும் அடைத்துக்கொண்டிருக்கின்றன. முகத்துவாரத்தின் மட்டமும் கடல் மட்டமும் சமமாக இருப்பதால் கடல் நீர் எளிதாக உள்ளே வந்துவிட முடியும்.

என்னதான் தீர்வு?

சென்னையின் ஆண்டு சராசரி மழையளவு 1,100 மி.மீ. கடந்த 2005-ல் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 2,566 மி.மீ. மழை பதிவானது. கொளத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வேளச்சேரி, மாம்பலம் உள்ளிட்ட 36 இடங்கள் வெள்ள அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. வெள்ளத் தடுப்புக்காக, பொதுப்பணித் துறை செயற்பொறியாளராக இருந்த காந்திமதிநாதன் உள்ளிட்ட நிபுணர்கள் குழு திட்ட அறிக்கை தயாரித்து அரசிடம் ஏற்கெனவே அளித்துள்ளது.

அதன்படி, நிலத்தடி கால்வாய்கள் மூலம் வாலாஜா அணைக்கட்டு – கோவிந்தவாடி கால்வாய் – காவேரிப்பாக்கம் ஏரி – கேசவரம் அணைக்கட்டு வழியாக பாலாற்றை கொசஸ்தலை ஆற்றுடன் இணைக்கலாம். இன்னொரு பக்கம் கோவிந்தவாடி கால்வாய் – கம்பக்கல் வாய்க்கால் – ஸ்ரீபெரும்புதூர் ஏரி – செம்பரம்பாக்கம் ஏரி வழியாக பாலாற்றை அடையாறு ஆற்றுடனும் இணைக்கலாம். ஆரணி ஆற்றை கொசஸ்தலை ஆறு – கண்டலேறு – பூண்டி கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்துடன் இணைக்கலாம். கூவத்தை ஜமீன் கொரட்டூர் அணைக்கட்டு – புது பங்காரு கால்வாய், செம்பரம்பாக்கம் ஏரி வழியாக அடையாறு ஆற்றுடன் இணைக்கலாம்.

இதன்மூலம் சென்னையின் வெள்ள அபாயத்தை முற்றிலும் தடுக்கலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர், விவசாய தண்ணீர் தேவையையும் முழுமையாக பூர்த்தி செய்ய இயலும்.

டி.எல்.சஞ்சீவிகுமார்

Courtesy: Tamil.thehindu.com

 

Read previous post:
0a1d
ஹார்வேர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க விஷால் ரூ.10லட்சம் நிதி!

ஹார்வேர்டு பல்கலைக்கழக்கத்தில் தமிழ்மொழிக்கு இருக்கை அமைக்க நடிகர் விஷால் ரூ.10லடசம் நிதி அளித்துள்ளார். மொத்தம் சுமார் ரூ.40கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் ரூ.17கோடி சேர்ந்திருப்பதாகவும், மத்திய

Close