உயிர் பறிக்கப்படும் இடம் நோக்கி செல்வது எத்தனை பெரிய துயர்?

அப்பாவை கம்பீரமாக பார்த்திருக்கிறேன். அப்படித்தான் அவர் பிம்பம் என்னுள் இன்றுவரை உள்ளது.

ஒருநாள் ஈழம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

80களின் பிற்பகுதி. அப்பா பத்திரிகையாளராக இருந்தார். அப்போதெல்லாம் இன்றைய கெடுபிடி இருக்கவில்லை. ஈழத்தமிழ் உறவுகள் வெகு இயல்பாக சென்னையில் இருந்தனர். நடமாடினர். சென்னையும் அவர்கள் ஊராகவே பாவித்தனர். நாமும் அவர்களை உடன் பிறந்தவர்களாகவே பாவித்தோம். அப்படி ஒரு ஈழத்தமிழர், அப்பாவுக்கு பழக்கம். நல்லவர். மிக அன்பு கொண்டிருந்தவர். அவரை பற்றி அப்பா நினைவுகூர்ந்துவிட்டு சொன்னார்:

“அப்போவும் இப்படித்தான் போர் நடந்துக்கிட்டு இருந்த சமயம். ஆபீஸ்ல புரொடக்‌ஷன் வேலை ஓடிக்கிட்டு இருந்தது. வீட்டுக்கு போகல. நைட் ஒரு போன் வந்தது. அந்த காலத்துல தெரியுமில்ல, நம்பர்கள் வச்ச பெரிய டயல் கொண்ட பழைய போன். எனக்குதான் கால் வந்திருந்தது. போய் பேசுனா, அந்த ஈழ நண்பர், ‘அண்ணன்.. ஊருல வர சொல்லியிருக்கிறாங்கள்.. இன்னைக்கு தோணியில போறன்..’

“அப்படின்னு சொன்னவரு, கொஞ்சம் அமைதியா இருந்துட்டு, ‘திரும்ப வருவனாண்ட்டு தெரியலை… அண்ணி, தம்பிக்கிட்ட சொல்லிடுங்கோ’ன்னு சொல்லிட்டு….”

வாக்கியத்தை முடிக்க முடியாமல் அப்பா மூச்சை இழுத்து, விட்டத்தை பார்த்தார். பின், உதடு நடுங்கி, “இப்படி ஒவ்வொரு உயிரா தூக்கித் தூக்கி கொடுத்து கண்ணு முன்னாடியே எல்லாரையும் தொலச்சுட்டோம்” என உடைந்து தழுதழுத்தார்.

நானும் அம்மாவும் சேர்ந்தே அழுதோம். கம்பீரமான அப்பா அழுதார் என்பது மட்டுமல்ல காரணம். இப்போது இந்த நொடி எழுதிக்கொண்டிருக்கும்போது கூட கண்ணீர் வழிந்தோடியபடிதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு உயிர், என் உயிர் போக போகிறது என சொல்லிவிட்டு உயிர் பறிக்கப்படும் இடத்தை நோக்கி செல்வது எல்லாம் எத்தனை பெரிய துயர்?

எது அந்த துயர் தாங்கும் வலிமை தந்தது? எந்த நம்பிக்கையை நோக்கி அந்த துயர் தாங்கப்பட்டது?

மகன், அப்பா, அம்மா, மனைவி, மகள், அண்ணன், தங்கை, தம்பி என எத்தனை எத்தனை? இன்றும் ஈழப்போரின் அந்த காணொளி….!

பதுங்குக்குழியின் மூட்டைகளுக்குப் பின் ஒரு சகோதரி நின்று பதைபதைப்போடு வெளியே பார்ப்பார். விமான சத்தம் கேட்கும். அநேகமாக, வெளியே நிற்கும் தன் அம்மாவை விமான சத்தம் கேட்டதும் உள்ளே வரச் சொல்லி கூப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன். தொடர்ந்து ஷெல் சத்தம் கேட்கும். கேமரா அம்மா பக்கமே திரும்பாது. அந்த சகோதரியை நோக்கியே இருக்கும். அடுத்து ஒரு வெடிப்பு சத்தம். உடனே அந்த சகோதரி நெஞ்சில் அடித்துக் கொண்டு ‘அம்மா, அம்மா’ என கதறுவார். வெளியே வர முற்படுபவரை சுற்றி உள்ளவர்கள் தடுத்து இழுப்பார்கள். கண் முன்னே குண்டு விழுந்து அம்மா உடல் சிதறுவதெல்லாம்….

இன்னும் என்ன சொல்வது, இந்த நாட்டின் குரூரத்தை. எழுத வேண்டுமென்றுதான் தொடங்கினேன்.. முடியவில்லை. அப்படியே முடிக்கிறேன்.

RAJASANGEETHAN