“அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்”: ரஜினிகாந்த் அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். இன்றுடன் ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவடைகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்தை கடைப்பிடித்தீர்கள். இதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். ரசிகர்களை சந்திக்கும் இந்த விழாவை ஏற்பாடு செய்து, அதை சரியாக நிர்வாகித்த சுதாகருக்கும், நண்பர் முரளி பிரசாத்துக்கும், சிவராமகிருஷ்ணன், பாபா மற்றும் அனைத்து ராகவேந்திர மண்டபத்தின் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மண்டபத்துக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு சிறு தொந்தரவு இருந்திருக்கும், இருப்பினும் ஒத்துழைப்பு தந்த அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜிம் பாய்ஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கவே முடியாது. அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகை சகோதரர்கள் என்னை விரட்டு விரட்டு என விரட்டுகிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய மேலதிகாரிகள் அவர்களை விரட்டுகிறார்கள். இவர்கள் நம்மை விரட்டுகிறார்கள். நான் அவர்களை தவிர்க்க சென்னை முழுக்க சுற்றிவிட்டேன். ஆனால் முடியவில்லை. நாலைந்து வார்த்தைகள் பேசினாலே சர்ச்சையாகி விடுகிறது. இன்னும் பேசிக்கொண்டே இருந்தால் சர்ச்சையாகிக் கொண்டே இருக்கும். ஆகையால் நான் அவர்களை தவிர்த்ததை தவறாக நினைக்க வேண்டாம். நான் சொல்ல வேண்டியதை இங்கே சொல்லிவிடுகிறேன். மற்றபடி நேரம் வரும்போது சொல்கிறேன்.

முதல் நாள் சந்திப்பில், நான் பேசியது எனது ரசிகர்களுக்காக சொன்னது. நான் அரசியலுக்கு வந்தால் எப்படியிருக்க வேண்டும் என்று பேசியது இவ்வளவு பெரிய வாதம், விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அதற்கு எதிர்ப்பு, ஆதரவு இருக்கலாம், எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். ஆனால், சிலர் சமூகவலைத்தளத்தில் எழுதும் போது திட்டி எழுதுகிறார்கள். அது எனக்கு கஷ்டமாக இல்லை. ஏன் வார்த்தைகளை உபயோகிப்பதில் தமிழ் மக்கள் கீழ்த்தரமாக போய்விட்டார்கள் என வருத்தப்பட்டேன்.

சமூகவலைத்தளங்களில் பேசுவதைப் பார்த்து எனது ரசிகர்கள் யாரும் வருத்தமோ, கோபமோ படவேண்டாம். எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நாம் வளர முடியும்.

ஒரு செடி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் குழி தோண்ட வேண்டும். அதில் மண், உரம் எல்லாம் போட்டு விதையைப் போட்டு மூடிவிடுகிறோம். மூடியவுடன் நல்லா அழுத்தி அமுக்குவோம். ஏனென்றால் அது வளர வேண்டும் என்பதற்காக மட்டும். ஆகையால் இந்த அவதூறுகள், திட்டுகள் எல்லாமே நமக்கு உரம், மண் மாதிரி. நிறைய திட்டுகள் இருந்தால் மட்டுமே நாம் இன்னும் வளர முடியும். அவர்கள் நமக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

ஒருமுறை புத்தர் தனது சிஷ்யர்களுடன் பயணம் போய் கொண்டிருந்தார். அப்போது நிறையப் பேர் வழி மறித்து பயங்கரமாக திட்டுகிறார்கள். அவ்வளவு திட்டியும் புத்தர் அமைதியாக நின்று சிரித்துக்கொண்டே இருந்தார். குருவே அமைதியாக இருந்ததால், சீடர்களும் பேசவில்லை. திட்டிமுடித்துப் போன பிறகு, “என்ன குருவே. அவ்வளவு திட்டுகிறார்கள். ஆனால், நீங்கள் பேசாமல் இருக்கிறீர்களே” என்று கேட்டார்கள். அவர்கள் திட்டிட்டு கொட்டுவிட்டு போய்விட்டார்கள். அதை நான் எடுத்துக் கொள்ளவில்லையே. அதையும் அவர்களே கொண்டு போய்விட்டார்கள் என்றார் புத்தார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.