“ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதல்வரா? கயவன் சுப்பிரமணியன் சுவாமியின் ஏவலரா?”

“தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தமிழர் பண்பாட்டை அழிக்கும் வகையில், சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசை எதிர்த்து, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சனநாயக முறையில் போராடுவோர் மீது ஓ.பி.எஸ். காவல்துறை காட்டுமிராண்டித்தனத்தை ஏவியிருப்பது, ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதலமைச்சரா, கயவன் சுப்பிரமணியன் சுவாமியின் ஏவலரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது” என்று தமிழ்தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளரும், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவருமான பெ.மணியரசன் கூறியுள்ளார்.

0a1aஇது தொடர்பாக பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓ.பன்னீர்செல்வம் அரசும், தமிழினத் துரோக அரசுதான் என்பதை இன்று (14.01.2017) மதுரையில் காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனம் நிரூபித்துள்ளது.

இயக்குநர் வ.கவுதமன் அவர்களும் மற்ற இளைஞர்களும் மதுரை அவனியாபுரத்தில், வழக்கம்போல் சல்லிக்கட்டு நடத்துவோம் என்று கூடினார்கள். ஆனால், அங்கு நேற்றிலிருந்து குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர், அங்கு வந்த காளைகளுக்குக் காவல் போட்டு கைவசப்படுத்திவிட்டார்கள். அதேபோல், அங்கு வந்த ஏறுதழுவும் வீரர்களையும் சுற்றி வளைத்து தங்கள் காவலில் வைத்துக் கொண்டார்கள்.

இந்நிலையில், இயக்குநர் கவுதமன் தலைமையில் உணர்வாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து, முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியால் அடித்துக் கலைத்துள்ளார்கள். பலரைக் கைது செய்துள்ளார்கள்.

இயக்குநர் கவுதமன் தாக்கப்பட்டு, காயமடைந்துள்ளார். இன்னொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. கவுதமன் அவர்களையும் மற்ற இளைஞர்களையும் காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தடியால் அடித்து, வன்முறை செய்வது தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிவு மறைவின்றி தெரிகிறது.

தமிழர்களின் மரபு வழிப்பட்ட பெருமைக்குரிய, மகிழ்ச்சிக்குரிய “பொங்கல்” நாளை, ஓ.பி.எஸ். அரசு இன்று துக்க நாளாக மாற்றியிருக்கிறது. சனநாயக வழிப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக்கூட அனுமதிக்காமல், இந்திய அரசுக்கு ஏவல் செய்து தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்கு தமிழர்களைத் தாக்கி, விழா நாளைக்கூட துயர நாளாக மாற்றக்கூடிய இனத்துரோக அரசாக ஓ.பி.எஸ். அரசு இருக்கிறது.

இப்படிப்பட்ட இனத்துரோகம், தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் நடக்கிறது? காவிரிச் சிக்கலில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கி இருநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கொளுத்தியக் கயவர்கள் மீது கூட அம்மாநில அரசு தடியடி நடத்தவில்லை. கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படிப்பட்ட இனவெறி வன்முறைகளுக்கு ஓ.பி.எஸ். அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று நாம் கோரவில்லை. ஆந்திராவில் சல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு காவல்துறைத் தாக்குதல் தொடுக்கவில்லை. கைதும் செய்யவில்லை.

தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தமிழர் பண்பாட்டை அழிக்கும் வகையில், சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசை எதிர்த்து, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சனநாயக முறையில் போராடுவோர் மீது ஓ.பி.எஸ். காவல்துறை காட்டுமிராண்டித்தனத்தை ஏவியிருப்பது, ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதலமைச்சரா, கயவன் சுப்பிரமணியன் சுவாமியின் ஏவலரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இன்று மதுரையில் காவல்துறை நடத்திய இனத்துரோகச் செயலுக்கு, கழுவாய் தேட வேண்டுமெனில் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்கள், அதற்குப் பொறுப்பான காவல் அதிகாரிகள் – அந்தக் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவரையும் உடனடியாக இடைநீக்கம் செய்து, சீருடையைக் கழற்றி வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே வழியாகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கைது செய்து வைக்கப்பட்டுள்ள கவுதமன் உள்ளிட்ட தமிழர் மானங்காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

 இவ்வாறு பெ.மணியரசன் கூறியுள்ளார்.