“பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைய வேண்டும்”: ஓ.பி.எஸ். அணி புதிய நிபந்தனை!
பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஈடுபட்டு வருகின்றன.
கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளதை அடுத்து, இவ்விரு அணிகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், நேற்று அஷ்டமி, இன்று நவமி என்பதால் இவ்விரு நாட்களிலும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை. அநேகமாக நாளை (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சமரச பேச்சுவார்த்தையின்போது ஓ.பி.எஸ். அணி சார்பில் வழக்கமான நிபந்தனைகளோடு சில கடுமையான ரகசிய நிபந்தனைகளும் முன்வைக்கப்படும் என தெரிகிறது. அவை:
முதல்வர் பதவி, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி ஆகிய முக்கிய பதவிகள் ஓ.பி.எஸ். அணிக்கு கொடுக்கப்பட வேண்டும்.
கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா டிவி, கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆர். ஆகியவை ஓ.பி.எஸ். அணியின் கட்டுப்பாட்டில் இயங்க சம்மதிக்க வேண்டும்.
அமைச்சர் பதவிகளிலும், கட்சியின் முக்கிய நிர்வாக பொறுப்புகளிலும் இருக்கும் சசிகலா ஆதரவாளர்களின் பதவிகளை உடனே பறிக்க வேண்டும். அந்த பதவிகளை ஓ.பி.எஸ். அணியினருக்கு கொடுக்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க.வை இணைக்க வேண்டும்.
மேற்கண்ட ரகசிய நிபந்தனைகளை, சமரச பேச்சுவார்த்தையின்போது ஓ.பி.எஸ். அணி முன்வைக்கும் என தெரிகிறது.