ஆளுநர் கிரண்பேடி மீது மானநஷ்ட வழக்கு: முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை!

புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஆளுநர் கிரண்பேடி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் மருத்துவ உயர்கல்வி பட்டம் மற்றும் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை தொடர்பான சர்ச்சை நடந்து வருகிறது. புதுச்சேரிக்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்டாக் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சிபிஐ சம்பந்தமான எந்த கருத்தையும் நான் கூற மாட்டேன்.

மருத்துவ பட்டம் மற்றும் பட்டய மேற்படிப்புக்கு 2017-18ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சென்டாக் கலந்தாய்வு தொடர்பாக துணை நிலை ஆளுநர் கருத்து கூறும்போது முதல்வர், அமைச்சர், தலைமை செயலாளர், சென்டாக் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எங்கள் அரசு அனுப்பிய சென்டாக் சம்பந்தமான கோப்புகள் அனைத்திலும் துணைநிலை ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். சென்டாக் மருத்துவ மேற்படிப்பு சம்பந்தமாக பேரவையில் விவரமான அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். மாணவர்களை சேர்ப்பதற்கான கடிதம் வழங்குவது மட்டும்தான் சென்டாக்கின் பணி. கடிதம் வழங்கிய பிறகு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் சேர்க்கப்பட்டார்களா என்று கண்காணிக்க வேண்டியது மத்திய மருத்துவக் கழகம்தான். கண்காணிக்கும் பொறுப்பு சென்டாக்குக்கு கொடுக்கவில்லை.

ஆளுநர் சென்டாக் அலுவலகம் சென்று, மத்திய தொகுப்புக்கு செல்ல வேண்டிய 26 இடங்களை மாநில மாணவர்களுக்கு தர வேண்டும் என உத்தரவிட்டார். கலந்தாய்வு சரியாக நடைபெறவில்லை என்றால் மாநில அரசின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவர வேண்டும். எனவே ஆளுநர் நேரிடையாக சென்றது மிகப்பெரிய தவறு. அங்கே அமர்ந்துகொண்டு கலந்தாய்வை நடத்தியது இரண்டாவது தவறு. விதிமுறைகளை மீறி 26 பேரை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது மூன்றாவது தவறு.

ஆளுநர் தவறான உத்தரவை போட்டு சென்டாக் அதிகாரிகளை செயல்படாமல் தடுத்துள்ளார் என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவரும். ஆளுநர் விதியை மீறி செயல்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆளுநராக இருப்பதற்கு தகுதியில்லாதவர். அதிகாரிகளை மிரட்டி பொய்யான வாக்குமூலம் பெற்று அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். சிபிஐ சுதந்திரமாக செயல்படுவார்கள்.

புதுச்சேரியில் அரசை குறை கூறுவதைத் தவிர எந்த வேலையையும் ஆளுநர் செய்யவில்லை. ஆளுநர் அதிகாரிகளை தூண்டி விடுவது குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றோம். தேவைப்பட்டால் ஆளுநர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம் என்றார்.